5 மணி நேரம் மணமகன் தாமதம்... திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை: டான்ஸால் வந்த வினை!

5 மணி நேரம் மணமகன் தாமதம்... திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை:  டான்ஸால் வந்த வினை!

மகாராஷ்டிராவில் திருமண ஊர்வலத்தில் நடனமாடிக் கொண்டே ஐந்து மணி நேரம் தாமதமாக மாப்பிள்ளை வந்ததால், கொதித்துப் போன மணமகளின் தந்தை திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டம் மல்காபூர் பங்ரா கிராமத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த 22-ம் தேதி மாலை 4 மணிக்கு திருமணம் நடைபெற முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மணமகனும், அவரது நண்பர்கள் டி.ஜே இசைக்குத் தக்கவாறு நடனமாடியபடியே திருமண மண்டபத்திற்கு ஐந்து மணி நேரம் தாமதமாக வந்தனர்.

இதனால், மணப்பெண் வீட்டாருக்கும், மணமகன் வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். அத்துடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். உடனடியாக கிராம அமைதி கமிட்டியினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

திருமண முகூர்த்த நேரத்திற்கு மணமகன் வராததால் மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினார். இதனால் மண்டபத்தை விட்டு மணமகன் குடும்பத்தினர் வெளியேறினர். இதன் பின் மண்டபத்தில் இருந்த உறவுக்கார வாலிபருடன் மணப்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்ததை அறிந்த மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகள் வீட்டிற்கு வந்து நியாயம் கேட்டனர். இதையடுத்து அவர்கள் வாங்கிக் கொடுத்த தங்கச்சங்கிலி, புடவை ஆகியவற்றை மணப்பெண்ணின் வீட்டார் ஒப்படைத்தனர். நடனத்தால் திருமணம் நின்று போன இந்த சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in