
கன்னியாகுமரி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, குமரிக் கடலை ரசிப்பதற்காக அமர்ந்து இருந்த நாற்காலிகள் குப்பை வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று காலை வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த குடியரசுத் தலைவர், தனிப்படகில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குச் சென்றார். முன்னதாக குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி நேற்று மாலையே ஆளுநர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரி வந்தார்.
அவரை குமரி ஆட்சியர் ஸ்ரீதர் வரவேற்றார். இதேபோல் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க விரும்பினார். இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வந்திருந்தார். கன்னியாகுமரியில் அவர் குடும்பத்தோடு அமர்ந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க இருந்தார். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய அஸ்தமனம் தெளிவாகத் தெரியவில்லை என சிறிதுநேரத்தில் கிளம்பிச் சென்றார். தொடர்ந்து அவரும், அவரது குடும்பத்தினரும் இருந்த நாற்காலிகளை கன்னியாகுமரி பேரூராட்சிக்கு சொந்தமான மக்கும் குப்பைகளைக் கொண்டுசெல்லும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். குப்பை வண்டியில் ஆளுநர் இருந்த நாற்காலிகளைக் கொண்டு செல்வதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் சிலர் இதை புகைப்படம் எடுக்க சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.