
தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலம் மக்களுக்கு பாலமாக திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நடந்த மேம்பால திறப்பு விழாவில் பேசினார்.
சென்னை கொளத்தூர் பகுதியில் 69.78 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் அண்ணா மேம்பாலம், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூலகம் என ஏராளமான திட்டங்களை உருவாக்கியது திமுக ஆட்சி. சென்னையை வலம் வந்தாலே திமுக அரசினால் உருவாக்கப்பட்ட திட்டங்களை, கலைஞர் கட்டிய பாலங்களை காணமுடியும். தற்போது தென் சென்னையில் 1400 கோடி செலவில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கலைஞர் காட்டிய வழியில் இந்த திராவிட மாடல் அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை இன்றைய தேவைகளுக்காக மட்டுமல்ல, நாளைய தேவைகளையும் கருத்தில் கொண்டு அமைத்து வருகிறது. எங்கெல்லாம் பாலங்கள் தேவையோ அங்கெல்லாம் பாலம் கட்டப்படுகிறது. இதன் மூலம் இந்த அரசு மக்களுக்கு பாலமாக இருந்து வருகிறது. அத்தகைய இந்த ஆட்சிக்கு மக்கள் எப்போதும் துணையாக இருக்க வேண்டும்’’ என்றார்.