`மத்திய அரசின் துணையோடு தமிழகத்தை அழிக்க சதி'- கர்நாடகா அரசை சாடும் பி.ஆர்.பாண்டியன்

`மத்திய அரசின் துணையோடு தமிழகத்தை அழிக்க சதி'- கர்நாடகா அரசை சாடும் பி.ஆர்.பாண்டியன்
மேகேதாட்டு

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான அனுமதி கேட்ட கர்நாடக அரசின் விண்ணப்பத்தினை மத்திய சுற்றுச்சூழல் துறை நிராகரித்துள்ள நிலையில் அணை குறித்த வரைவுத் திட்ட அறிக்கையை கர்நாடகம் உடனே திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேகேதாட்டு அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் கர்நாடக அரசு கொடுத்திருந்த விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் துறை பரிசீலிக்கவே இயலாது என கூறி இன்று நிராகரித்துவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை உடனே திரும்பப் பெறவேண்டும். மறுக்கும் பட்சத்தில் அறிக்கையை நிராகரித்து ஆணைய தலைவர் உத்தரவிட வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேகேதாட்டு அணையை கட்டி தமிழகத்தை அழிப்பதற்கு மத்திய அரசின் துணையோடு சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை ஏற்கக்கூடாது என திட்டவட்டமாக இதுவரை நடந்த மூன்று கூட்டங்களில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி இல்லாமலேயே சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்டு கர்நாடகம் விண்ணப்பம் செய்திருந்தது. சுற்றுச்சூழல் துறை இன்று மேகேதாட்டு அணை கட்டுவதற்கான விண்ணப்பத்தை தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களிடையே ஒத்த கருத்தை உருவாக்கி ஒப்புதல் பெறாமல் அனுமதி அளிக்க இயலாது' என விண்ணப்பத்தை பரிசீலிக்கவே முடியாது என நிராகரித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

இந்நிலையில் மத்திய அரசு கர்நாடகாவின் வரைவுத் திட்ட அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நிர்ப்பந்திப்பது சட்டவிரோதமானது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் நடவடிக்கையை பின்பற்றி மத்திய அரசு வரைவுத் திட்ட அறிக்கையை ஆணையத்திடம் இருந்து திரும்பப் பெற முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஆணைய தலைவர் அதனை நிராகரித்து உத்தரவிட வேண்டும்.

இது குறித்து தமிழக அரசின் பிரதிநிதியாக இடம் பெற்றுள்ள கூடுதல் தலைமை செயலாளரும், நீர்வளத்துறை செயலாளருமான சந்தீப்சக்சேனா உடனடியாக ஆணையத்தில் முறையிட்டு நிராகரிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in