பிரியா
பிரியா

மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்: அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

மாணவி பிரியா மரண வழக்கில் மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும்  என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக அரசு மருத்துவர்கள் இருவரை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. அத்துடன் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஜாமீன் கேட்டு  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  அவர்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதையடுத்து  அவர்களை பிடிக்க காவல்துறை சார்பில்  மூன்று தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களை  கைது செய்தால் மாநிலம் முழுவதும் தீவிர போராட்டம் நடத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.  "சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலுக்கும், உதவி தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அதே சமயம் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின்போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்த துறை மூத்த நிபுணரின் கருத்தை காவல்துறை பெற வேண்டும்.  அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு (Criminal Negligence) இருக்கிறது என்று அவர் கூறினால் மட்டுமே காவல்துறை 304 A பிரிவில் வழக்கு தொடர வேண்டும். அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.

தற்போது நடந்த மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாக சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்திருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழக காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவர்களை சேர்த்து, அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வருகிறது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலைக் குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து, உடனடியாக சரணடைய கூறியிருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

இந்த நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் மருத்துவரின் பெயர்களையோ, புகைப்படங்களையோ ஊடகத்தில் கிரிமினல் குற்றவாளிகளை போல வெளியிட வேண்டாம் என்றும் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது.

நோயாளியின் காலை சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லிஜென்ஸில் மட்டுமே வரும். போலீஸ் நடவடிக்கை அதிகப்படியானது. மருத்துவர், செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது.

எனவே மருத்துவர்கள் மீது பதியப்பட்ட 304ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும். அதையும் மீறி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. 

மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதற்காக  சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்கள் சங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் எடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன்  மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்தவும் அவர்கள்  முடிவு செய்துள்ளனர். அப்படி அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினால்  தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in