
தான் காதலித்தவன் கொலை வழக்கில் சிக்கியவன் என்பதால் காதலைத் துறந்த கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுகன். இவரது மகள் தரணி (19). விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் எழுந்த தரணி தனது வீட்டின் தோட்டத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்திருக்கிறார்.
அப்போது அங்கு மறைந்திருந்த வாலிபர் ஒருவர் தரணியின் பின் பக்கமாக சென்று அவரை மடக்கி பிடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் தரணியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
தரணியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது கல்லூரி மாணவி தரணி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழுத்துப் பகுதி ஆழமாக அறுபட்ட நிலையில் அதிகம் ரத்தம் வெளியேறி அந்த இடத்திலேயே தரணி உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி மாணவி தரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கல்லூரி மாணவி தரணி, மதுரபாக்கத்தைச் சேர்ந்த கணேஷ் என்ற 21 வயதுள்ள வாலிபரை காதலித்து வந்ததாகவும், கணேஷ் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி போலீஸாரால் தேடப்பட்டு வந்ததால் அவருடனான காதலை கல்லூரி மாணவி தரணி கைவிட்டிருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கணேஷ் மறைந்திருந்து தரணியை கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கல்லூரி மாணவி தரணியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணேஷை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கல்லூரி மாணவி அதிகாலையில் தனது வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.