தேவாலயம், ஜூஸ் கடை, விடுதிக்கு அழைத்து சென்று விசாரணை: குமரியில் காதலியிடம் கேரள போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

குமரி மாவட்டம், திற்பரப்பு பகுதிக்கு அழைத்து வந்த கேரள போலீஸார்
குமரி மாவட்டம், திற்பரப்பு பகுதிக்கு அழைத்து வந்த கேரள போலீஸார்

தன்னை உருகி, உருகி காதலித்த ஷாரோனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த காதலி கிரீஸ்மாவை குற்ற நிகழ்விடங்களுக்கு அழைத்துச் சென்று கேரள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக, கேரள எல்லையோரப் பகுதியில் உள்ள தமிழகத்தின் ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவரது மகள் கிரீஸ்மா(23). இவருக்கும் கேரளத்தைச் சேர்ந்த ஷாரோன்ராஜ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஷாரோன் ராஜ், குமரி மாவட்டத்தில் கல்லூரி படித்தார். அப்போதுதான் காதல் மலர்ந்தது. இந்தக் காதல் விறு, விறுவென வளர்ந்து இருவரும் சேர்ந்து அதிகமான இடங்களுக்கு ஊர் சுற்றியுள்ளனர். சேர்ந்தே விடுதிகளிலும் தங்கினர். இந்நிலையில் கிரீஸ்மாவுக்கும், ராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கிரீஸ்மாவின் ஜாதகப்படி இரண்டாவது திருமணமே தங்கும் என இருந்ததாகவும், அந்த மூடநம்பிக்கையால் ஷாரோன் ராஜை கொலை செய்ததாகவும் தகவல் கசிந்தது.

கிரீஸ்மா தன் காதலன் ஷாரோன்ராஜை பிரிய முடிவு எடுத்து அவருக்கு கசாயம் மற்றும் ஜூஸில் விசம் கலந்து கொடுத்தார். ஜூஸ் சேலஞ்ச் என்னும் பெயரில் ஒருவிளையாட்டு போல் இந்த கொலையை அரங்கேற்றியிருந்தார் கிரீஸ்மா. இதில் படிப்படியாக உடல் உறுப்புகள் செயல் இழந்து கடந்த 25-ம் தேதி ஷாரோன்ராஜ் உயிரிழந்தார். இதில் ஷாரான் ராஜின் தந்தை ஜெயராஜ் கொடுத்த புகாரின்பேரில் முதலில் கிரீஸ்மா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஆவணங்களை அழித்த கிரீஸ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

கிரீஸ்மாவை குமரி மாவட்டத்தில் அவரும் ஷாரோன் ராஜூம் சேர்ந்து சுற்றிய பகுதிகளுக்கு அழைத்து வந்து இன்று கேரள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரீஸ்மாவுக்கும், ஷாரோன் ராஜூக்கும் இடையே ரகசியத் திருமணம் நடந்ததாகக் கூறப்படும் வெட்டுக்காடு தேவாலயத்திற்கும் அழைத்து சென்றதும் விசாரணை நடத்தினர். அப்போது கிரீஸ்மா மிகவும் யதார்த்தமாக இருந்துள்ளார். அவரிடம் துளிகூட பதற்றமும் இல்லை. அப்போது போலீஸ்காரர் ஒருவர், “இந்த தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும்போது நீண்டநாள்கள் சேர்ந்து, சந்தோசமாக வாழ வேண்டும் என ஷாரோன் ராஜ் பிரார்த்திருப்பார்”என்று சொல்லியிருக்கிறார். உடனே கிரீஸ்மா, ‘ஆம். ஆனால் அதுதான் எல்லாம் மாறிவிட்டதே!’ என மிகக் கூலாகச் சொல்லியுள்ளார்.

ஜீஸ் வாங்கிய கடையில் விசாரணை
ஜீஸ் வாங்கிய கடையில் விசாரணை

தொடர்ந்து கிரீஸ்மாவை குழித்துறை பகுதியில் அவர் எப்போதும் ஜூஸ் வாங்கும் கடைக்கும் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் திற்பரப்பு அருவி அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஷாரோன் ராஜ் உடன் மூன்றுநாள்கள் தங்கியிருந்தது பற்றியும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த விடுதிக்கும் அழைத்துப்போய் விசாரித்தனர். ஆனால் எங்குமே குற்ற உணர்வோ, பதற்றமோ இல்லாமல் கிரீஸ்மா மிக யதார்த்தமாக இருந்தது கேரள போலீஸாருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் கிரீஸ்மாவின் வீடு தமிழக எல்லைக்குள் இருப்பதாலும், வழக்கோடு சம்பந்தப்பட்ட பகுதிகள் தமிழகத்தில் இருப்பதாலும் இவ்வழக்கை தமிழகக் காவல்துறைக்கு மாற்றுவது குறித்தும் கேரள போலீஸார் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in