வேலை தேடிச்சென்ற இளைஞரை 70 ஆயிரத்திற்கு விற்ற கும்பல்: கண்களில் ரசாயன ஊசி போட்டு பிச்சையெடுக்க வைத்த கொடூரம்

 சுரேஷ் மஞ்சி.
சுரேஷ் மஞ்சி.

வேலைத்தேடிச் சென்ற இளைஞரின் கண்களில் ரசாயன ஊசி போட்டு 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதுடன் பிச்சை எடுக்க வைத்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிஹாரைச் சேர்ந்தவர் சுரேஷ் மஞ்சி(26). இவர் உத்தரப்பிரதேசம் கான்பூரில் தனது சகோதரருடன் வேலை தேடி ஆறு மாதங்களுக்கு முன்பு சென்றார். இதன் பின் அவர் காணாமல் போனார். நேற்று உடல் முழுவதும் காயங்களுடன் சுரேஷ் மஞ்சி வீடு திரும்பினார். தனக்கு நடந்த கொடுமை குறித்து சுரேஷ் மஞ்சி சொன்னதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சுரேஷ் மஞ்சி கூறுகையில்," வேலை வாங்கித்தருவதாக என்னை அழைத்துச் சென்ற விஜய் என்பவரால் கடத்தப்பட்டேன். ஒரு பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்று என் கை, கால்களை அடித்து உடைத்தார். அத்துடன் கண்களில் ரசாயனத்தை ஊற்றி என்னைக் குருடாக்கினார். இதன் பின் டெல்லியில் உள்ள ராஜ் என்ற பிச்சைக்காரக்காரக் கும்பலின் தலைவரிடம் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டார். இதன் பின், அவர் என்னை ஹரியாணாவிற்கு அனுப்பி பிச்சை எடுக்க வைத்தார். அங்கு என்னை இரும்புக்கம்பியால் தாக்கி, போதை ஊசி போட்டார்கள். பிச்சை எடுக்காவிட்டால் உணவு தரமாட்டோம் என்று துன்புறுத்தினர். என் உடல்நிலை மோசமடைந்ததால் கான்பூருக்கு விஜய்யுடன் அனுப்பி வைத்தனர். அங்கும் நான் பிச்சை எடுக்க வைக்கப்பட்டேன். அங்கு என் நிலையை உணர்ந்த குடியிருப்புவாசிகள் உதவியுடன் என் சகோதரனைத் தேடிப்பிடித்தேன்" என்றார். இந்த சம்பவம் குறித்து ஒரு பெண் உள்பட மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை ஏசிபி விகாஸ் பாண்டே கூறுகையில், "சுரேஷ் மஞ்சிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து உள்ளூர் எம்எல்ஏ தகவல் கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in