
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே ஹெல்மெட் வாங்குவதில் தகராறில் சாலையோரக் கடைக்காரரை கஞ்சா போதையில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற இளைஞர்கள் சினிமா படப்பாணியில் போலீஸார் துரத்திப்பிடித்து கைது செய்தனர்.
ஆவடியில் இருந்து அம்பத்தூர் செல்லக்கூடிய சிடிஎஸ் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த ராஜாகுமார் சிங் சில மாதங்களாக சாலையோரம் ஹெல்மெட் கடை நடத்தி வருகிறார்.
இன்று நண்பகல் ஆவடியிலிருந்து அம்பத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் ராஜாகுமாரை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர் பணம் கொடுக்க மறுத்ததால், கஞ்சா போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியால் ராஜா குமார் சிங்கை பலமாக தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்தக் காயமடைந்து நிலைக்குழைந்து கீழே விழுந்துள்ளார்.
சத்தம் கேட்டு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் வந்துள்ளனர். அவர்களை கண்டதும் இளைஞர்கள் பைக்கில் தப்ப முயன்றுள்ளனர். சினிமா படப்பாணியில் போலீஸார் அந்த இரு இளைஞர்களையும் துரத்திப் பிடித்தனர். முன்னதாக படுகாயம் அடைந்த ராஜாகுமார் சிங்கை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், ஆவடி இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) மற்றும் ராகேஷ் குமார் (22) என தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது ஆவடி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.