
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது தொடர்ந்து நீர்வரத்து குறைந்த அளவிலேயே உள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் அதிக மழை பொழிந்து பெரும்பாலான ஏரிகள், குளங்கள் அனைத்தும் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியும் கடந்த ஐந்தாம் தேதி வாக்கிலேயே மொத்த கொள்ளளவான 24 அடியில் 21 அடியை எட்டியது. அதனால் பாதுகாப்பு கருதி ஏரிக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் அதிகளவு மழை பெய்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைவாக இருப்பதால், தற்போது ஏரிக்கு வரும் நீரின் அளவும் குறைந்த அளவிலேயே உள்ளது.
இன்று அதிகாலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 267 கனஅடியாக மட்டுமே உள்ளது. ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒன்பதாவது நாளாக தொடர்ந்து 804 கன அடியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஏரியின் நீர் இருப்பு 19.84 அடியாக உள்ளது.