இலங்கையின் செயலை கண்டிக்க வேண்டும்: இந்திய அரசுக்கு தமிழக  மீனவர்கள் கோரிக்கை

இலங்கையின் செயலை கண்டிக்க வேண்டும்: இந்திய அரசுக்கு தமிழக மீனவர்கள் கோரிக்கை

இந்திய மீனவர்களை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதும்,  நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவதுமான செயல்களில் ஈடுபடும் இலங்கை  காவல்துறையையும், அதற்கு காரணமாக இருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும்  இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை சிறையில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த  மீனவர்கள்  இலங்கை  நீதிமன்றத்திற்கு நேற்று( ஜன.3) கொண்டு வரப்பட்டனர். அப்போது   தமிழக மீனவர்கள் அனைவரையும் நீண்ட ஒரே  சங்கிலியால் கைகளைப் பிணைத்து அழைத்து வரப்பட்டனர். இப்படி ஒரே சங்கிலியால் கைவிலங்கு போட்டு அழைத்து வரப்பட்ட வீடியோக்கள் செய்திகளில் ஒளிபரப்பப்பட்டது. இது தமிழக மீனவர்கள் மத்தியில்  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்திய இலங்கை மீனவர்கள்  கூட்டமைப்பின் சார்பில் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த  கூட்டமைப்பின் சார்பில் இன்று  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எதிர்பாராத விதமாக அந்நிய நாட்டு கடற்படையால்  கைது செய்யப்பட்டால் அவர்களை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்பது சர்வதேச விதிமுறை.  இந்திய கடற்பரப்புகளில்  எல்லை தாண்டிவரும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டால் இந்திய அரசு மனிதாபிமானமாக நடத்தி,  மீனவர்களையும், படகுகளையும் பத்திரமாக பாதுகாத்து திருப்பி அனுப்பி வருகிறது. 

ஆனால் இலங்கை அரசு இந்திய மீனவர்களை கைவிலங்கிடுவதும், நிர்வாணப்படுத்தி மீனவர்களை அவமானப்படுத்துவதும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை உடனடியாக இந்திய அரசு இதை கண்டித்து தடுத்து நிறுத்த வேண்டும். 

கடந்த 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள 6-வது சரத்தில்  கூறப்பட்டுள்ள மீன்பிடி உரிமை ஒப்பந்தத்தை மீறி இலங்கை கடற்படை பாக்ஜலசந்தி பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், படுகொலை செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இது சம்பந்தமாக தொடர்ந்து இந்திய இலங்கை அரசுகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில் இலங்கை  மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய இலங்கை நல்லுறவைக் கெடுக்கும் வகையில் இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் இலங்கையில் உள்ள தனது ஆதரவு மீனவர்களை தூண்டி விடுவதும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை கைவிலங்கிட்டும், நிர்வாணப்படுத்தியும் அவமதித்து வருகிறார்.

இந்திய இலங்கை நல்லுறவுக்கும், இந்திய இலங்கை மீனவர் நல்லிணக்கத்திற்காக முயற்சி செய்யும் இலங்கை மீனவர் சங்கத் தலைவர்களைக் காவல்துறை மூலம் வழக்கு போட்டு அச்சுறுத்தல் செய்யும் வேளைகளிலும் இறங்கியிருக்கிறார். 

இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சீன அரசுடன் இணைந்து டக்ளஸ் தேவானந்த நைனா தீவு போன்ற இடங்களில் கடல் அட்டை பண்ணைகளை உருவாக்கி அதில் சீனர்களை கொண்டுவந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை கைவிலங்கிட்டு அழைத்து செல்வதும், நிர்வாணப்படுத்தி சிறைக்கு அழைத்துச் செல்வதும் தொடர் கதையாகி வரும் நிலையில்  இதுகுறித்து  டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை கமிஷனில் கடல்சார் மக்கள் நல சங்கமத்தின் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயல்பாட்டையும், இலங்கை காவல்துறை நடவடிக்கைகளையும்  ராஜாங்கரீதியாக இந்திய அரசு கண்டிக்க வேண்டும்"  என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in