
வீட்டுக்கு அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு இரு மணிநேரங்களில் மீனவர் வீடு திரும்பிய நிலையில் அவர் வீட்டில் இருந்த 45 பவுன் நகைகள் திருடு போயிருந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன்(28). மீன் பிடித் தொழில் செய்யும் இவரும், இவரது மனைவியும் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். இவர்கள் இரண்டு மணிநேரத்தில் வீடும் திரும்பிவிட்டனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபாண்டியன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் பீரோவில் இருந்த 45 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. ஜெயபாண்டியன் மருத்துவமனைக்குச் சென்று திரும்பிய இருமணிநேர இடைவெளியைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸாருக்கு ஜெயபாண்டியன் புகார் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வந்து அங்கிருந்த தடயங்களைச் சேகரித்துச் சென்றனர். வீடுகள் நெருக்கடி மிகுந்த சாலையில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.