தண்ணீர் பிடிக்கச்சென்ற தந்தை; கழிவுநீர் தொட்டியில் இறந்துகிடந்த மகன்: ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சோகம்

தண்ணீர் பிடிக்கச்சென்ற தந்தை; கழிவுநீர் தொட்டியில் இறந்துகிடந்த மகன்: ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சோகம்

செங்கல்பட்டு அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திறந்திருந்த கழிவுநீர் தொட்டியில் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோய் இருப்பது வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவரான இவர், தனது மகன் பிரதீஸை (6) நேற்று மாலை அழைத்துக்கொண்டு ஊராட்சிமன்ற அலுவலகத்தில் குடிநீர் பிடிக்க சென்றிருக்கிறார். அப்போது அவரது மகன் அருகில் விளையாடி கொண்டு இருந்திருக்கிறார். தண்ணீர் பிடித்து வந்த மணிகண்டன், தனது மகனை தேடி இருக்கிறார். எங்கும் காணவில்லை. இதனால் பதறிய மணிகண்டன் அங்கும் இங்குமாக ஓடி இருக்கிறார். ஒரு கட்டத்தில் திறந்திருந்த கழிவுநீர் தொட்டியை பார்த்திருக்கிறார். அப்போது, மகன் விழுந்து மயங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி திறந்து கிடந்த நிலையில் அதன் அருகில் விளையாடிய சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுவனின் உயிரிழப்புக்கு ஊராட்சி மன்ற அலுவலர்களின் அலட்சியப்போக்கே காரணம் என்று அப்போது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே, சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் ஊராட்சி மன்ற செயலர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in