கத்தியால் குத்திவிட்டு தப்பிய காதல் கணவன்; மகளின் நிலை என்ன?- உயர் நீதிமன்றத்தை நாடிய தந்தை

கத்தியால் குத்திவிட்டு தப்பிய காதல் கணவன்; மகளின் நிலை என்ன?- உயர் நீதிமன்றத்தை நாடிய தந்தை

ஆந்திராவுக்கு அழைத்துச் சென்ற காதல் மனைவியை கத்தியால் குத்திவிட்டு காதல் கணவன் தப்பியுள்ளார். மகளின் நிலை என்பது குறித்தும் அவரை கண்டு பிடித்து தருமாறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை செங்குன்றம் ஜோதி நகர் 8-வது தெரு பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு திருமணமாகி பல்கீஸ் என்ற மனைவியும், தமிழ்செல்வி(19) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தமிழ்செல்வி அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளி மதன்(20) என்பவரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். தமிழ்செல்வியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தமிழ்செல்வியும், மதனும் திருமணம் செய்து கொண்டு பாடியநல்லூரில் ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஜூலை 25-ம் தேதி தமிழ்செல்வியின் தாயார் பல்கீஷ் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகள் தமிழ்செல்வி பாடியநல்லூரை சேர்ந்த மதன் என்பவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், ஜூலை 25-ம் தேதி முதல் தனது மகளை காணவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து மதனிடம் கேட்ட போது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்றும் எனவே காணாமல் போன தனது மகள் தமிழ்செல்வியை கண்டு பிடித்து தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தப் புகாரின் பேரில், தமிழ்செல்வியின் கணவர் மதனை காவல் நிலையம் அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மதன், "கடந்த 25-ம் தேதி நானும் எனது மனைவி தமிழ்செல்வியும் ஆந்திர மாநிலம் வரதபாளையம் பகுதியில் உள்ள கோனே அருவிக்கு சென்றோம். நானும் என் மனைவியும் தனிமையில் அமர்ந்திருந்தபோது அங்கு கஞ்சா போதையில் வந்த ஒரு கும்பல் எங்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பயந்து எனது மனைவி தமிழ்செல்வியை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட்டேன்" என்று கூறியுள்ளார்.

மதன் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ஆந்திர மாநிலம் வரதபாளையத்தில் உள்ள கோனே அருவிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காட்சியில் மதன் தனது மனைவி தமிழ்செல்வியுடன் உள்ளே செல்லும் காட்சியும், பின்னர் மதன் மட்டும் வெளியே வரும் காட்சியும் பதிவாகி இருந்தது. தொடர் விசாரணையில், மதன் கூறியது போல் அங்கு கஞ்சா போதையில் யாரும் தகராறு செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதனால் மதன் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு மீண்டும் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மதன், சம்பவத்தன்று நானும் என் மனைவியும் கோனே அருவிக்கு சென்றதாகவும், அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து வந்து விட்டதாகவும் தெரிவித்தார். பின்னர், காவல்துறையினர் சம்பவம் நடத்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் தமிழ்செல்வி குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அது குறித்து எந்த தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து, காவல்துறையினர் காணாமல் போன தமிழ்செல்வி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தமிழ்செல்வியின் தந்தை மாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணாமல் போன மகளை மீட்டு தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. காணாமல் போன தமிழ்செல்வி என்ன ஆனார், அவர் உயிருடன் இருக்கிறாரா? என பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது போலீஸ் தரப்பில் இருந்து அளிக்கும் தகவலை பொறுத்தே இவ்வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in