
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கிய விவசாயிகளின் நீதி கேட்டு நெடும் பயணம் இன்று கன்னியாகுமரியில் தொடங்கியது.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் டெல்லி போராட்டத்தின்போது பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியில் இன்று தொடங்கிய டெல்லி நாடாளுமன்றம் நோக்கிய நீதி கேட்டு நெடும் பயணத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.
தொடக்க நிகழ்ச்சியில் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஹரியானாவை சேர்ந்த கக்கா ஜி பஞ்சாப் பல்தேவ் சிங் சிரஷா, ராஜேந்தர் சிங் கோல்டன் ஆகியோர் உரையாற்றினர். செல்வி சுதா மொழிபெயர்ப்பு செய்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். பின்னர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின் பயணத்தை தொடங்கிய விவசாயிகளின் பேருந்துக்கு பச்சைக்கொடி காட்டி துரை வைகோ பயணத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணிக்கும் இந்த பயணம் 20-ம் தேதி டெல்லியில் நிறைவு பெறுகிறது.