‘அவர் எதற்கு பிஹார் வருகிறார் என இந்தியாவுக்கே தெரியும்’ - அமித் ஷாவை வாரிய தேஜஸ்வி!

‘அவர் எதற்கு பிஹார் வருகிறார் என இந்தியாவுக்கே தெரியும்’ - அமித் ஷாவை வாரிய தேஜஸ்வி!

உள் துறை அமைச்சர் அமித் ஷா வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டவே பிஹாருக்கு வருகிறார் என அம்மாநிலத் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார்.

கடந்த மாதம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதீஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து மீண்டும் முதல்வரானார். அதன் பின்னர் முதன்முறையாக பிஹார் செல்லவிருக்கிறார் அமித் ஷா.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீமாஞ்சல் பிரதேசத்தில் செப்டம்பர் 23 மற்றும் 24-ம் தேதி தங்கியிருக்கும் அமித் ஷா, முதல் நாள் புர்னியா மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 24-ம் தேதி கிருஷ்ணகஞ்ச் பகுதியில் நடக்கும் கட்சி நிர்வாகக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அமித் ஷாவின் வருகை தொடர்பாகப் பேசிய ஐக்கிய ஜனதா தள தேசியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன், “பிஹாருக்கோ நாட்டின் பிற பகுதிகளுக்கோ செல்லும் அமித் ஷா மத நல்லிணக்கத்தைக் குலைக்கவே முயற்சி செய்வார். பிஹார் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அவரால் ஒன்றும் செய்ய முடியாது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவிடம் ராஜீவ் ரஞ்சனின் கருத்து தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த தேஜஸ்வி, “இது ஐக்கிய ஜனதா தளத்துக்கு மட்டும் தெரிந்த விஷயமா என்ன? அமித் ஷாவின் உண்மையான நோக்கம் என்ன என ஒட்டுமொத்த பிஹாருக்கும் தெரியும். அதைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அமித் ஷாவின் பெயரைச் சொன்னாலே ஒட்டுமொத்த தேசமும் அவரது வேலை என்ன என்பது பற்றிப் பேசத் தொடங்கிவிடும்” என்றார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளைத் திரட்டும் பணியில் நிதீஷ் குமார் ஈடுபட்டுவருகிறார். தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களும் அவரது முயற்சிக்குத் துணை நிற்கின்றனர்.

இதற்கு முன்னர் பாஜக குறித்து கடுமையான விமர்சனங்களை தேஜஸ்வி யாதவ் முன்வைத்திருக்கிறார். எனினும், அமித் ஷா குறித்து நேரடியாக அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in