விபத்தில் சிக்கிய மக்கள்: உடனே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்த கள்ளக்குறிச்சி கலெக்டர்

விபத்து நடந்த இடத்தில் ஆட்சியர்
விபத்து நடந்த இடத்தில் ஆட்சியர்

எலவனாசூர்கோட்டை அருகே காருடன் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் அந்த வழியாக சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விபத்தில் சிக்கியவர்களை துரிதமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த செயல் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது, எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் காரும் சரக்கு வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இரண்டு வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தன. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்களை துரிதமாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதில் காரில் பயணித்தவர்கள் சேலத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

காரில் பயணித்தவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் விமான நிலையம் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து உடனடியாக வேறு வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரின் இந்த மனித நேயமிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in