ஏஎஸ்பி பல்வீர்சிங்- பற்கள் உடைக்கப்பட்ட கைதிகள்
ஏஎஸ்பி பல்வீர்சிங்- பற்கள் உடைக்கப்பட்ட கைதிகள்விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய நெல்லை ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய நெல்லை ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு ஆஜரானவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எடுத்துள்ளார்.

அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் பல்பீர் சிங். இவர் அம்பை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறு வழக்குகளில் சிக்குவோரை காவல் நிலையத்துக்கு அழைத்து, கட்டிங் பிளேயரால் பற்களைப் பிடுங்குவதாக புகார் எழுந்தது. இவரது ஆளுகையின் கீழ் வரும், பாப்பாக்குடி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் காவல் நிலையப்பகுதிகளில் கடந்த சில வாரங்களில் இப்படி பல இளைஞர்களுக்கும் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளன.

அண்மையில் ஜமீன் சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர், தனக்கும் இதே போன்று ஏ.எஸ்.பி பல்பீர் சிங்கால் பல் பிடுங்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த வேறு 3 இளைஞர்கள் தங்கள் மீதான விசாரணையின்போது ஏ.எஸ்.பியால் பற்கள் பிடுங்கப்பட்டதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் புகார்கள் சென்றது.

இதுகுறித்து விசாரித்து அறிக்கைத் தர சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலமுக்கு, நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு இட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட இளைஞர்களான லெட்சுமி சங்கர், சுபாஷ், வெங்கடேஷ், சூர்யா ஆகியோர், தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுடன் உதவி ஆட்சியர் முன்பு நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இவ்விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள், மாநில மனித உரிமை ஆணையத்திற்கும் புகார் அனுப்பி உள்ளனர்.

இதனிடையே, விசாரணைக்கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எடுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறை அதிகாரி ஒருவரே விசாரணைக்கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in