தனியார் ரப்பர் தோட்டத்தில் அமர்ந்த நிலையில் உயிரிழந்த யானை: வனத்துறை விசாரணை தீவிரம்

தனியார் ரப்பர் தோட்டத்தில் அமர்ந்த நிலையில் உயிரிழந்த யானை: வனத்துறை விசாரணை தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் ரப்பர் தோட்டத்தில் யானை ஒன்று இறந்தநிலையில் கிடந்தது வன ஆர்வலர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதியான பத்துகாணி அருகில் உள்ளது கற்றுவ மருதன்பாறை. வனப்பகுதியை ஒட்டிய பகுதியான இங்கு ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன.

இந்தப் பகுதியில் உள்ள தனியார் ரப்பர் தோட்டம் ஒன்றில் இன்று மதியம் யானை ஒன்று அமர்ந்த நிலையில் இருந்தது. ஆனால் அந்த யானை அசையவே இல்லை. நீண்ட நேரமாக யானை அப்படியே இருந்ததால் அந்த வழியாக வேலைக்குச் சென்ற தோட்டத் தொழிலாளர்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போதுதான் யானை உயிர் இழந்து இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தோட்ட உரிமையாளர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

வனத்துறையினர் இப்போது தோட்டத்திற்கு விரைந்துள்ளனர். யானை வயோதிகத்தின் காரணமாக இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருந்தும் வேறு காரணங்கள் எதுவும் இருக்கிறதா? யானை காட்டுப்பகுதியை விட்டுவிட்டு தனியார் ரப்பர் தோட்டத்திற்கு ஏன் வந்தது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. இதனிடையே மரணம் அடைந்த யானையை பிரேத பரிசோதனை செய்து இறப்பிற்கான காரணத்தை அறியவும் வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். யானை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in