
கேரளாவில் மனைவி இறந்ததால் விரக்தியில் வாழ்ந்து வந்த தந்தைக்கு, அவரது மகளே திருமணம் செய்து வைத்த நிகழ்வு நடந்திக்கிறது. அதுவும் 62 வயது தந்தைக்கு, அவரது வயதுக்கேற்ற பொருத்தமான 60 வயது பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள திருஏறங்காவு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப். அங்குள்ள பகவதி அம்மன் கோயில் அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதுபொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ராஷ்மி, ரெஞ்சு என்ற 2 மகள்கள், ரஞ்சித் என்ற மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. மகன் ரஞ்சித் கொல்லத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ராதாகிருஷ்ண குருப்பின் மனைவி திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். மனைவி இறந்தது அவருக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மனைவி இறந்தபிறகு வழக்கமாக அவர் நடந்து கொள்ளவில்லை. மிகவும் கவலையுடன் காணப்பட்டார். சிறிது நாட்களில் சரியாகி விடும் என்று அவரது மகள்களும், மகனும் நினைத்தனர். ஆனால் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அவர் விரக்தியுடனேயே இருந்ததை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த அவரது மகள் ரெஞ்சு பார்த்தார்.
வெளிநாட்டில் வசித்து வரும் அவர், தனது தந்தைக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார். விரைவிலேயே அவர் வெளிநாட்டுக்கு திரும்பிச் செல்வதற்கு முன்னதாக தனது தந்தைக்கு திருமணம் செய்துவைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ரெஞ்சு, திருமண வரன் பார்க்கக்கூடிய இணைய தளங்களில் பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார். அப்போது கணவர் இறந்துவிட்டதால் தனியாக வாழ்ந்துவரும் மல்லிகா குமாரி என்பவரை பற்றிய விவரம் ராதாகிருஷ்ண குருப்பின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
குழந்தைகள் இன்றி தனியாக வாழ்ந்து வந்த அந்த பெண், அவருக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று அவர்கள் கருதினர். அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அதுபற்றி இருவரிடமும் இரு வீட்டாரும் பேசினர். அவர்களும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ராதாகிருஷ்ண குருப் மற்று மல்லிகா குமாரிக்கும் கோயிலில் வைத்து இரண்டாவது திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இருவரது உறவினர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு