ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு அறிக்கை: கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோரிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

மாணவியின் தாய் செல்வி
மாணவியின் தாய் செல்வி

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் கூறாய்வு அறிக்கைகளை ஆய்வு செய்த ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வு அறிக்கை மாணவியின் பெற்றோரிடம் நாளை வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மாதம் 13-ம் தேதியன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவியின் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவியின் உடல் பிரேத பரிசோதனை, மற்றும் மறு பிரேத பரிசோதனை அறிக்கைகளில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று மாணவியின் பெற்றோர் தெரிவித்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஜிப்மர் மருத்துவ குழுவினர் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்து அது குறித்த தங்களது அறிக்கையை நேற்று மாலை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாணவியின் தாயார் செல்வி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை, ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வு அறிக்கை, உடற்கூறாய்வின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஆகியவற்றை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி புஷ்பராணி, ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கை நாளை பெற்றோரிடம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அந்த ஆய்வறிக்கையில் மாணவியின் மரணம் குறித்து தாங்கள் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் என்று மாணவியின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in