ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் தம்பதி: திருமணமான 2 மாதத்தில் நடந்த சோகம்

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் தம்பதி: திருமணமான 2 மாதத்தில் நடந்த சோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காதலித்து மணவாழ்வில் இணைந்த ஜோடி ஒன்று அவர்களுக்குள் அடிக்கடி நடந்த சண்டையால் இரண்டே மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அனந்தமாடன்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்க முனியசாமி(28). இவர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலைசெய்துவந்தார். துவரங்கை பகுதியைச் சேர்ந்த சீதாலெட்சுமி(22) என்பவரது உறவினர் வீடு அனந்தமாடன்பச்சேரி பகுதியில் உள்ளது. அங்கு சீதாலெட்சுமி அடிக்கடி வந்துசெல்வார். அப்போது அவருக்கும், தங்க முனியசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இந்தப் பழக்கம் காதலாக மாறியது.

இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த இருமாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் உறவுகள் சூழ கோலாகலமாக நடந்தது. இருவரும் அனந்தமாடன்பச்சேரியில் வசித்து வந்தனர். ஆனால் திருமணத்திற்குப் பின்பு தம்பதிக்குள் தொடர்ந்து கருத்துவேறுபாடுகள் நிலவிவந்தது. இந்தநிலையில் மணவாழ்க்கையில் தொடர் சண்டைகளே வந்ததால் தம்பதிகள் இருவருமே தற்கொலை முடிவு எடுத்துள்ளனர். வெகுநேரம் ஆகியும் இவர்கள் வீடு பூட்டியே கிடந்ததால் நேற்று மாலை அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தருவை குளம் போலீஸார் வந்துபார்த்தபோது, வீடு பூட்டியிருந்தது. இதையடுத்து பூட்டை உடைத்து போலீஸார் உள்ளே சென்றனர்.

அப்போது ஒரு கயிற்றின் ஒருமுனையில் தங்கமுனியசாமியும், மற்றொரு முனையில் அவரது மனைவி சீதா லெட்சுமியும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தனர். தம்பதிகள் இருவரும் சேர்ந்தே தற்கொலை செய்தார்களா? என தருவைகுளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி இருமாதங்களே ஆவதால் சார் ஆட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in