ஓய்வு நேரத்தில் தோட்டத்தில் வேலை: மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய அரசு பேருந்து நடத்துனர் உயிரிழப்பு

 மரணம்
மரணம் மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய நடத்துனர் பரிதாப மரணம்

மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய அரசுப் பேருந்து நடத்துனர் தவறி விழுந்து உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் போக்குவரத்துக் கழகத்தில் திருவட்டாறு பணிமனையில் நடத்துனராக உள்ளார். இவருக்கு வலியஏலா வெற்றிப்பாறை என்னும் இடத்தில் சொந்த தோட்டம் உள்ளது. இவர் டியூட்டி இல்லாத நாள்களிலும், ஓய்வு நேரத்திலும் தன் தோட்டத்திற்குப் போய் வேலைகள் செய்வது வழக்கம். தன் தோட்டத்தில் உள்ள மாமரங்களில் மாங்காய் காய்த்துக் குலுங்குவதை பார்த்த ராஜன், அவற்றைப் பறித்து சாக்கில் கட்டி சந்தையில் விற்கும் நோக்கத்தில் மரத்தில் ஏறினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார். தோட்டத்திலேயே படுகாயம் அடைந்து மயங்கிய நடத்துனர் ராஜனை அப்பகுதிவாசிகள் மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த ராஜனுக்கு மீனா என்னும் மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இதுகுறித்து கடையால் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in