சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி: புகார் தந்தவரை லாரி ஏற்றிக்கொலை

சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி: புகார் தந்தவரை லாரி ஏற்றிக்கொலை

கல்குவாரிக்கு எதிராக புகார் கொடுத்தவர் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ள பதை பதைக்கும் சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே காளிபாளையம் என்ற இடத்தில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அது உரிமை முடிந்த பின்னும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக அதே ஊரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் கனிமவளத் துறைக்கு புகார் அளித்திருந்தார். அந்த புகாரை விசாரணை செய்த அதிகாரிகள் கல் குவாரியை மூட உத்தரவிட்டனர்.

இதற்கு முன் பலமுறை குவாரி குறித்து ஜெகநாதன் புகார் அளித்திருப்பதால் ஆத்திரத்தில் இருந்த செல்வகுமார் தற்போது குவாரியை ஜெகநாதன் மூட வைத்ததால் மிகவும் அதிகமான கோபத்தில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் ஜெகநாதன் நேற்று இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். காருடையம்பாளையத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஜெகநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களின் விசாரணையில் ஜெகநாதன் மீது மோதிய லாரி செல்வகுமாருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது. அதனையடுத்து இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ள க .பரமத்தி போலீஸார் குவாரி உரிமையாளர் செல்வகுமார், மற்றும் லாரி ஓட்டுநர் சக்திவேல் ஆகியோரைத் தேடி வருகின்றனர். குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் அந்த குவாரிக்குச் சொந்தமான லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in