2வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர் கவலைக்கிடம்: ராகிங் செய்த மூன்று பேர் கைது

 2வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர் கவலைக்கிடம்: ராகிங் செய்த மூன்று பேர் கைது

சீனியர் மாணவர்கள் ராகிங் தொல்லை கொடுத்ததால் விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் திப்ரூகார் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வணிகவியல் துறையில் இளங்கலை பிரிவில் ஆனந்தகுமார்(21) என்ற மாணவர் படித்து வந்தார். அத்துடன் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார்.

நேற்று இரவு கல்லூரி விடுதியின் 2வது மாடியில் இருந்து ஆனந்தகுமார் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்த அவரை, மற்ற மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். தற்போது ஆபத்தான நிலையில் ஆனந்தகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆனந்தகுமாரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், தன்னுடைய மகன் ராகிங் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருப்பதாக கூறியுள்ளனர். அத்துடன் தங்கள் மகனுக்கு ராகிங் தொல்லை கொடுத்த 5 மாணவர்களின் மீதும் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நிரஞ்சன் தாக்கூர், பத்மநாத், கோஹைன் பருவா ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூர நிகழ்வு குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "ராகிங் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் திப்ரூகார் பல்கலைக்கழக மாணவர் காயம் அடைந்தது கவனத்திற்கு வந்தது. மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார். ராகிங் கொடுமையால் மாணவர் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த முயன்ற சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in