
விடுமுறை கொடுக்காததால் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த பெண் தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் ஆயுதப்படை 7-ம் படைப் பிரிவு தலைமைக் காவலராக இருப்பவர் சொர்ணவேணி. இதே படைப்பிரிவில் சார்பு ஆய்வாளராக இருப்பவர் வள்ளிச்செல்வி. இவர்கள் இருவருக்கும் நேற்று மாலை பணியின் போதே திடீர் கைகலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தலைமைக் காவலர் சொர்ணவேணி, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு அட்மிட் ஆகவந்தார். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகவும், அட்மிஷன் போடவில்லை எனவும் ஆயுதப்படை ஆய்வாளரிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், “எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் எஸ்.ஐ வள்ளிச்செல்வியிடம் விடுப்புக் கேட்டேன். ஆனால் விடுப்பு கொடுக்கவில்லை. எனக்கு வார விடுப்பும் தர மறுக்கிறார். தற்செயல் விடுப்பும் எனக்கு அதிக நாள்கள் இருக்கிறது. என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் மட்டுமே, அதற்குரிய காரணத்தைச் சொல்லி எஸ்.ஐ வள்ளிச்செல்வியிடம் விடுப்புக் கேட்டேன். ஆனால் அவர் எனக்கு நீ சரியாக சல்யூட் அடிக்கவில்லை என மன உளைச்சல் ஏற்படுத்துகிறார். எனது லீவு மனுவை என் முகத்தில் வீசி தாக்கினார். இதனால் எனக்கு உள்காயம் ஏற்பட்டது.
நான் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகவந்தபோது, என்னை அட்மிட் செய்யக்கூடாது என மருத்துவர்களிடம் பேசியதால் அட்மிட் செய்யவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் கொடுத்தார். ஆனால் இவ்விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உயர் அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தலைமைக் காவலர் சொர்ணவேணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் எஸ்.ஐ வள்ளிச்செல்வியும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி ஆகி, சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.
பெண் காவலர்களுக்குள் நடந்த இந்த மோதல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.