காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை... தெறித்து ஓடிய கடத்தல் கும்பல்: திருச்செந்தூரில் மீட்கப்பட்டது குழந்தை

காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை... தெறித்து ஓடிய கடத்தல் கும்பல்: திருச்செந்தூரில் மீட்கப்பட்டது குழந்தை

திருநெல்வேலி மாவட்டம், ஆற்றங்கரை பள்ளிவாசலில் நேற்று நள்ளிரவில் கடத்தப்பட்ட குழந்தை இன்று காலையில் திருச்செந்தூர் கோயில் வாசலில் மீட்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ஆற்றங்கரை பள்ளிவாசல் மிகவும் பிரசித்திப்பெற்றது. சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இங்கு தங்கியிருந்து தொழுகை செய்வது வழக்கம். அந்தவகையில் கடையநல்லூரைச் சேர்ந்த சாகுல்ஹமீது- நாகூர் மீரா தம்பதியினர் தங்களது இரண்டரை வயது மகள் நஜிலா பாத்திமாவுடன் பள்ளிவாசல் பகுதியிலேயே தங்கினர். நேற்று காலை கண்விழித்துப் பார்த்தபோது இரண்டரை வயதே ஆன குழந்தை நஜிலா பாத்திமாவைக் காணவில்லை.

குழந்தை தெரியாமல் தூக்கத்தில் இருந்து எழுந்து அக்கம், பக்கம் சென்றிருக்கலாம் என முதலில் தேடினர். ஆனால் குழந்தையைக் காணவில்லை. இதைத் தொடர்ந்து கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தையை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்றது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது.

இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். கார்களை தடுத்து நிறுத்தி வாகன தணிக்கையும் செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் வாசல் முன்பு ஒரு குழந்தை நின்று அழுதுகொண்டிருப்பதாக திருச்செந்தூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் அந்தக் குழந்தையை புகைப்படம் எடுத்து கூடங்குளம் போலீஸாருக்கு அனுப்பினர். அதன்பின்பு அந்தக் குழந்தை ஆற்றங்களை பள்ளிவாசலில் இருந்து கடத்தப்பட்ட நஜிலா என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து நஜிலாவின் பெற்றோரும், காவல்துறையினரும் திருச்செந்தூர் சென்று குழந்தையை மீட்டனர்.

காவல்துறையின் தீவிர தேடலுக்குப் பயந்து குழந்தையைக் கடத்திய கும்பல், சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக குழந்தையை திருச்செந்தூரில் கொண்டுவிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in