தந்தை ஸ்தானத்தில் இருந்து மாணவர்களுக்கான திட்டங்களைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தீட்டி வருகிறார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள புனித வளனார் பெண்கள் பள்ளியில் தமிழக கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடந்த இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று 448 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ‘’சைக்கிளை ஒரு இயந்திரமாக பார்க்கக் கூடாது. இது பல பேருடைய வாழ்க்கையை உயர்த்த உதவிய சக்கரமாக இருந்திருக்கும். ஒரு காலத்தில் பெரிய தலைவர்களுக்கும், இந்த சைக்கிள் உதவியாக இருந்திருக்கும். தங்களுடைய பயணத்தை வீட்டில் தொடங்கி பள்ளிக்கூடத்தை நோக்கி வருகிறது.
அங்கிருந்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பயணம் தொடங்குகிறது. இதற்கு இந்த சைக்கிள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தது என்பதை பல தலைவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை படிக்கும் போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
’மாணவச் செல்வங்களுக்கு நமது கல்வித்துறை மூலம் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறேன். முதலமைச்சராக இருந்து இந்த திட்டத்தை தீட்டவில்லை. உங்களுடைய தந்தை ஸ்தானத்தில் இருந்து இந்த திட்டங்களை தீட்டுகிறேன்’ என சொல்லக்கூடியவர் நம்முடைய முதலமைச்சர். அவர் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் எல்லாம், எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
உங்களுடையை வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள என்னுடைய பொறுப்பு என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அதனை மனதில் வைத்துக் கொண்டு நல்ல மாணவ செல்வங்கள் என்கிற பெயரை எடுக்க வேண்டும்’’ என்றார்.