
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனின் இலங்கை பாஸ்போர்ட்டை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் திருப்பி வழங்கியது.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், அதை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்த வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் மத்திய சிறையில் சாந்தன் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்து கடந்த நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னதாக நீதிமன்றத்தில் உள்ள தனது பாஸ்போர்ட் 1995-ம் ஆண்டு காலாவதியாகி விட்டதாகவும், அதை புதுப்பிப்பதற்காக, திருப்பித் தரக் கோரியும் சாந்தன் தரப்பில் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி தங்க மாரியப்பன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. திருச்சி முகாமில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாந்தன் அழைத்து வரப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி, சாந்தனின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை சரி பார்த்த பின், பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார். அதேசமயம் நீதிமன்றத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் பாஸ்போர்ட்டை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி சாந்தனின் பாஸ்போர்ட் திருப்பி வழங்கப்பட்டது.