ஆஷ் துரையை மெச்சுகிறதா திமுக அரசு?

தூத்துக்குடி மாநகராட்சியை தூற்றும் பாஜக!
ஆஷ் நினைவு மண்டபம்
ஆஷ் நினைவு மண்டபம்

டில்லியில் நடைபெற்ற குடியரசுத் தின அலங்கார அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த ஊர்தியில் வ.உ.சி தொடங்கி, வாஞ்சிநாதன் வரை தமிழகத்தைச் சேர்ந்த பல சுதந்திரப் போராட்ட தியாகிகளின் படங்களும் இருந்தன. மத்திய அரசு தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததை லாவகமாகப் பிடித்துக்கொண்ட தமிழக அரசு, அனைத்து மாவட்டங்களுக்கும் அந்த ஊர்தியை அனுப்பிவைத்தது.

தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளை மத்திய அரசு கொச்சைப்படுத்திவிட்டதாக அப்போது ஆக்ரோஷப்பட்டது திமுக. இந்த நிலையில், வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்கக் காரணமானவரும், வீர வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான ஆஷ் துரையின் மணிமண்டபத்தை புனரமைக்க தூத்துக்குடி மாநகராட்சி தீவிரம்காட்டி வருவது திமுக அரசை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மேயரும், அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரருமான ஜெகன் பெரியசாமி இந்த விவகாரத்தில் எடுத்துவரும் முயற்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகில் ஆஷ் துரை மணிமண்டபம் அமைந்திருக்கும் சாலையின் பெயரே வ.உ.சி சாலைதான். வணிக நோக்கத்துடன் இந்தியாவுக்குள் வந்த வெள்ளையர்களை சுதேசி கப்பலை இயக்கி வணிகத்தாலேயே திருப்பி அடித்தவர் வ.உ.சி. சுதந்திரப் போராட்டத்தில் சிறைசென்ற அவரை செக்கிழுக்க வைத்தனர் கொடூர ஆட்சியர்கள். வ.உ.சி-க்கு சிறைதண்டனை கிடைக்க காரணமாக இருந்தவர் அன்றைய ஆட்சியர் ஆஷ் துரை. 1908-ல் நடந்த நெல்லை எழுச்சிப் போராட்ட துப்பாக்கிச்சூடுக்கும் ஆஷ் துரையே காரணம். நெல்லை மக்களின் சுதந்திர வேட்கையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியவர் ஆங்கிலேய ஆட்சியரான ஆஷ் துரை!

அப்படிப்பட்ட ஆஷ் துரையை எதிர்த்து செங்கோட்டையில் இருந்து வெடித்துக் கிளம்பினார் 25 வயதே ஆன வீர இளைஞர் வாஞ்சிநாதன். தனது மனைவியிடன் ரயிலில் கொடைக்கானலுக்குப் பயணப்பட்ட ஆஷ் துரையை கடந்த 1911-ம் ஆண்டு துப்பாகியால் சுட்டு வீழ்த்தினார் வாஞ்சிநாதன். எங்கே, தான் சிக்கினால் தனது நண்பர்களும் சிக்கிக்கொள்வார்களோ என நினைத்து தானும் தற்கொலை செய்துகொண்டார். அந்த வீர வாஞ்சியை போற்றும் விதமாக, ஆஷ் துரையை அவர் சுட்டுக்கொன்ற மணியாச்சி ரயில்நிலையத்திற்கு ‘வாஞ்சி மணியாச்சி’ என பெயர் சூட்டப்பட்டது.

அப்படிப்பட்ட ஆஷ் துரையின் மணிமண்டபத்தை புனரமைக்க தூத்துக்குடி திமுக மேயர் அதிக அக்கறைகாட்டுவதை இப்போது அரசியலாக்கி வருகிறது பாஜக தரப்பு.

ராமநாதன்
ராமநாதன்

இது குறித்து வாஞ்சி இயக்கத்தை நடத்திவரும் ராமநாதனிடம் பேசினோம். “பாளையங்கோடையில் ஆஷ் துரை கல்லறை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஒரு குழுவினர் போய் அஞ்சலி செலுத்துவதும், ஆஷ் துரையை நாயகனாக்கி பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு அனுமதி கொடுக்கும் நெல்லை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறை தலைவருக்கே மனு கொடுத்திருக்கிறேன். ஆஷ் துரைக்கு அஞ்சலி செலுத்துவதே தேசத்துரோகம் என்பேன்.

இந்த நிலையில், இப்போது ஆஷ் துரை மணிமண்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி புனரமைப்பதும் என்னைக் கேட்டால் அந்த ரகம்தான். இவ்வளவு ஏன்... ஆங்கிலேயர்கள் இட்டகட்டளைகளை செவ்வனே நிறைவேற்றிவந்த கொடுங்கோலன் நீலனுக்கே சென்னையில் சிலை இருந்தது. மக்கள் கிளர்ச்சியில் நீலனின் சிலை அகற்றப்பட்டது. அதுபோல என்றைக்கோ ஆஷ் துரை நினைவு மண்டபமும் அகற்றப்பட்டிருக்கவேண்டும்.

ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது. அரசு, ஒன்று வாஞ்சிநாதனை ஏற்கவேண்டும். அல்லது ஆஷ் துரையை ஏற்கவேண்டும். இதில் இரட்டை வேடம் போடுவது தெளிவாகத் தெரிகிறது. இங்கே கொஞ்சம் வரலாற்றையும் திரும்பிப் பார்க்கவேண்டி இருக்கிறது. செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு எம்ஜிஆர் சிலை அமைத்தார். அங்கு இருந்த அரசு தொடக்கப் பள்ளியையும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி வாஞ்சிநாதன் பெயர் வைத்தார். 1957-ல் காமராஜர் வாஞ்சிநாதன் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், பணிகள் நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் கருணாநிதிதான் நிதி ஒதுக்கி மணிமண்டபம் காட்டினார்.

பக்தவச்சலம் காலத்தில் வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாளுக்கு ஓய்வூதியம்கூட வழங்கவில்லை. குமரி அனந்தன் மணியாச்சி ரயில் நிலையத்திற்கு, வாஞ்சி மணியாச்சி என பெயர் மாற்ற வேண்டும் என போராடி வெற்றிகண்டார். அப்போது அவர் காங்கிரஸ்காரர் அல்ல. காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். அண்ணாதுரை ஆட்சியில் பொன்னம்மாளின் ஓய்வூதியத்திற்கு ஆவன செய்தார். ஆனால், ஓய்வூதிய தொகை கைக்கு வரும்முன்பே பொன்னம்மாள் இறந்துவிட்டார்.

தேசியக் கட்சிகளுக்கு வாஞ்சி குறித்த பார்வை இந்த அளவில் தான் இருந்தது. ஆனால், திராவிட இயக்கங்கள் வாஞ்சியின் தியாகத்தின் மீது மதிப்பும், அவர் குடும்பத்தின் மீது அக்கறையும் கொண்டிருந்தன. ஆனால், இப்போது ஆஷ்துரை நினைவு மண்டபத்தை திமுக ஆட்சியில் புனரமைப்பதைப் பார்த்தால் திராவிட இயக்கங்களும் தடுமாறுவது தெரிகிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை நிகழ்த்திய ஜெனரல் டயர்கூட ஆங்கிலேயர்களைப் பொறுத்தவரை நல்லவர்தான். அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைத்திருந்தால், அதையும் புனரமைக்க நிதி ஒதுக்குவார்களா?” என்று ஆவேசப்பட்டார் ராமநாதன்.

பாஜக கண்டன போஸ்டர்...
பாஜக கண்டன போஸ்டர்...

1912-ல் தூத்துக்குடி சார் ஆட்சியராக இருந்த ஏ.ஆர்.காக்ஸ் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1913-ல் நெல்லை ஆட்சியர் ஜே.சி.மெலானியால் இந்த ஆஷ் துரை நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. இந்த மண்டபம் சுதந்திரத்துக்குப் பிறகு பராமரிக்காமல் கைவிடப்பட்டது. தனியார் கல்வி அறக்கட்டளை ஒன்று இதை தாமாக முன்வந்து சுத்தப்படுத்தி பராமரித்து வந்தது. இப்போது இந்த ஆஷ் மண்டபத்தை புனரமைக்க தூத்துக்குடி மாநகராட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பாஜக, இதைக் கண்டித்து கண்டனப் போஸ்டர்களை ஒட்டி இருக்கிறது.

‘வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்த கொடுங்கோலன் ஆஷ்துரை நினைவு மண்டபத்தை புதுப்பித்தால் வாஞ்சிநாதன், வ.உ.சி ஆகிய தியாகிகளுக்காக நாங்கள் போராடுவோம்’ என்ற பாஜகவின் போஸ்டர் வாசகங்கள் உணர்வு ரீதியாக தூத்துக்குடி மக்களை உசுப்பிப் பார்க்கின்றன.

ஜெகன் பெரியசாமி
ஜெகன் பெரியசாமி

இதுகுறித்து தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பேசினோம். “மாநகராட்சி சார்பில் நடக்கும் பணி என்றாலும், இது பொலிவுறும் நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் நடக்கும் பணி. 5 புராதன கட்டிடங்களின் இந்த புனரமைப்புப் பணிகள் மத்திய அரசின் ஒப்புதலோடுதான் நடக்கிறது. ஆஸ் துரை மண்டபத்தை புனரமைக்க எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை. அது, புராதனக் கட்டிடம் என்னும் அளவிலேயே மத்திய அரசின் ஒப்புதலோடு புனரமைப்பு செய்யப்படுகிறது” என்றார்.

புராதன கட்டிடம் என்னும் அளவில் ஆஸ் துரை நினைவு மண்டபத்தை புனரமைப்பது ஒருவகையில் சரியானதே. என்றாலும் அதை மாநகராட்சி கட்டிடமாக மாற்றி, அங்கே நூலகம் அமைத்து, வ.உ.சி, வாஞ்சிநாதன் போன்ற வீரத்தியாகிகளின் வரலாற்றை வளரும் தலைமுறையினரை வாசிக்க வைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in