தலைக்கேறிய போதையால் தகராறு; கூலித் தொழிலாளியை கொன்று மண்ணில் புதைப்பு: வீட்டில் நடந்த கொடூரம்

தலைக்கேறிய போதையால் தகராறு; கூலித் தொழிலாளியை கொன்று மண்ணில் புதைப்பு: வீட்டில் நடந்த கொடூரம்

போதை தலைக்கேறிய வெறியில் தன்னுடன் மது குடித்தவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து மணலில் புதைத்து வைத்துள்ள கொடூரம் அரியலூரில் நடந்துள்ளது.

அரியலூர் அருகே உள்ள கீழவிளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (48). இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஆதிச்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் (50) என்பவருடன் சேர்ந்து  கீழ விளங்குடியில் உள்ள தனது வீட்டில் மது அருந்தி உள்ளனர். மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரம் அடைந்த அறிவழகன் போதை தலைக்கேறிய நிலையில் வெங்கடாசலத்தை  அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த வெங்கடாசலம்  அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்திருக்கிறார். இதையடுத்து  வெங்கடாசலத்தை வீட்டிற்கு  அருகில் உள்ள பகுதிக்கு கொண்டு சென்று  மணலில்  புதைத்து அதன் மேல் விறகுகளை அடுக்கி வைத்திருக்கிறார்.

அதன்பின்னர் அருகிலுள்ள தனது  உறவினர் வீட்டுக்கு சென்று  நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கடாசலத்தின் உறவினர்கள் தேளூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.  புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்,  அறிவழகனை  கைது செய்தனர். மேலும் சடலம் புதைக்கப்பட்டிருந்ததால் அரியலூர் வட்டாட்சியர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்டிருந்த வெங்கடாசலத்தின் உடலை போலீஸார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அறிவழகனிடம் போலீஸார் தொடர்ந்து  விசாரணை செய்து வருகின்றனர். குடிபோதையில் ஒருவரை கொலை செய்து மண்ணில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in