
விருதுநகர் மாவட்டத்தில் சொத்துப் பிரச்சினையில் ஏற்பட்ட முன் தகராறில் அண்ணனைக் கொலை செய்துவிட்டு தம்பி ரிலாக்ஸாக ஓய்வெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஓ.மேட்டுப்பட்டி வைரவசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ்(58) இவர் செருப்புக்கடை வைத்திருந்தார். இவரது தம்பி மொட்டைச்சாமி(55). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது. மொட்டைச்சாமிக்கும், பொன்ராஜீக்கும் இடையில் வழக்கம் போல் சொத்து தொடர்பாக நேற்று சண்டை நடந்தது.
இந்நிலையில் இன்று காலையில் பொன்ராஜ் தன் செருப்புக்கடையை வழக்கம் போல் திறந்துவைத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மொட்டைசாமி அவரைக் கத்தியால் குத்தினார். இதில் வயிற்றில் குத்துக்காயம்பட்ட பொன்ராஜ் ரத்தவெள்ளத்தில் கடையிலேயே விழுந்து உயிர் இழந்தார். ஆனால் அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் பொன்ராஜ் தன் வீட்டிற்குச் சென்று ரிலாக்ஸாக ஓய்வெடுத்தார்.
இந்நிலையில் பக்கத்து கடைக்காரர்கள் பொன்ராஜ் கடைக்குள் இறந்து கிடப்பதைப் பார்த்து சாத்தூர் தாலுகா காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பொன்ராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மொட்டைச்சாமியையும் கைது செய்தனர். அண்ணனைக் கொலை செய்துவிட்டு எவ்வித சலனமும் இன்றி வீட்டில் கொலையாளியான அவரது தம்பி ஓய்வெடுத்த சம்பவம் போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சொத்துப் பிரச்சினையில் அண்ணனை தம்பியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.