முத்தம் கொடுத்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள்: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி

முத்தம் கொடுத்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணமகள்: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் முத்தம் கொடுத்ததால் ஆவேசமடைந்த மணமகள், திருமணத்தை நிறுத்திவிட்டார். மணமகளின் இந்த செயலால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம், சம்பால் பகுதியை சேர்ந்தவர் விவேக் அக்னிகோத்ரி (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 27-ம் தேதி இரவு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் என 300க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். வரவேற்பு விழா நடந்து கொண்டிருந்தபோது, மணமகனுக்கு மணமகன் விவேக் அக்னிகோத்ரி திடீரென முத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஆவேசமும் அதிர்ச்சியும் அடைந்த மணமகள், உடனடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தினார்.

காரணம் தெரியாமல் அங்கிருந்தவர்கள் குழப்பம் அடைந்தனர். மணப்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, மணமகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் மணமகள் சமாதானத்தை ஏற்காமல் மறுத்துவிட்டார். இத்தனை பேர் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரின் குணாதிசயங்கள் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திய மணமகள், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மணமக்களிடம் பேசி சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் மணமகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

"மண மேடையில் இருந்த என்னை தகாத முறையில் விவேக் தொட்டபோது உடனே தடுத்தேன். திடீரென முத்தம் கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்ததோடு அவமானப்படுத்தப்பட்டேன். என் சுயமரியாதை பற்றி கவலைப்படாமல் விருந்தினர்கள் முன்னிலையில் மோசமாக விவேக் நடந்து கொண்டார். எதிர்காலத்தில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்று எனக்கு பயமாக இருக்கிறது. எனவே அவரோட செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்" என்று மணமகள் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள மணமகன் விவேக், மணமகளுடன் பந்தயம் கட்டியதின் அடிப்படையிலேயே அவருக்கு மணமடையில் வைத்து முத்தம் கொடுத்ததாகவும், அனைவர் முன்னிலையும் முத்தமிட்டால் 1500 ரூபாய் தருவதாகவும் முத்தமிடாவிட்டால் 3000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பந்தயம் கட்டியதாகவும் கூறியுள்ளார். இதனை மறுத்துள்ள மணமகள், எந்த பந்தயம் கட்டவில்லை என்று கூறி இருக்கிறார். தற்போதுதான் இந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. ஒரு முத்தத்தால் திருமணமே நின்று போன சம்பவம் உபி மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in