திருமணம் முடிந்த ஆறே மாதம்: தற்கொலை செய்துகொண்ட புதுமாப்பிள்ளை

திருமணம் முடிந்த ஆறே மாதம்: தற்கொலை செய்துகொண்ட புதுமாப்பிள்ளை

குமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக திருமணம் முடிந்த புதுமணத் தம்பதிகளில் கணவன் அல்லது மனைவி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கெனவே கருங்கல் பகுதியில் திருமணம் முடிந்த இரண்டே நாளில் புதுமாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்த நிலையில், இன்று இரண்டாவது சம்பவமாக இன்னொரு புதுமாப்பிள்ளை தற்கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரிமாவட்டம், தெங்கன்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார்(33). கட்டுமானத் தொழிலாளியான இவர் சரஸ்வதி(21) என்ற பெண்ணைக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தார். இவர்கள் நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் சரஸ்வதி நேற்று தன் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இன்று அவர் தனது வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாகத் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. சரஸ்வதி பலமுறை அழைத்தும், மகேஸ்குமார் கதவைத் திறக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஜன்னல் வழியாகப் பார்த்தபோது வீட்டிற்குள் மகேஷ்குமார் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து இருந்தார். இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் வடசேரி போலீஸார், மகேஷ்குமார் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மகேஷ்குமார் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குடும்பப் பிரச்சினைகளில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்துகொள்வது அதிகளவில் நடந்துவருகிறது. தற்கொலைக்கு எதிரான எண்ணங்களையும், குடும்ப வாழ்வை எதிர்கொள்ளும் மனோதிடத்தையும் புதுமணத் தம்பதிகளுக்கு அரசோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in