ஆதார் அட்டை எடுக்கச் சென்ற மகனை அடித்துச்சென்றது தண்ணீர்: கவனிக்காத தாயால் நடந்த துயரம்

ஆதார் அட்டை எடுக்கச் சென்ற மகனை அடித்துச்சென்றது தண்ணீர்: கவனிக்காத தாயால் நடந்த துயரம்

ஆதார் அட்டை எடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த  இரண்டரை  வயது சிறுவன்  அருகில் உள்ள வாய்க்காலில் ஆழம் தெரியாமல் இறங்கி அதில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் கொள்ளிடத்தில்  நடந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமிர்தலிங்கம், ரஞ்சிதா தம்பதியினர். இவர்களது இரண்டரை வயது மகன் அமரன். அமரனுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்காக நேற்று மாலை கொள்ளிடத்தில் உள்ள அஞ்சலகத்திற்கு ரஞ்சிதா அழைத்துச் சென்றிருந்தார். அப்போது ஆதார் அட்டை எடுப்பதற்காக தேவையான ஆவணங்களை கொடுத்துவிட்டு அதை சரி பார்ப்பதற்காக காத்திருந்த நேரத்தில், அமரனும் அவன் கூட வந்த மற்றொரு சிறுவனும் அஞ்சலகத்தை விட்டு வெளியில் வந்திருக்கின்றனர்.

அஞ்சலகத்திற்கு வெளியே நேர் எதிரில்   ராஜன்  வாய்க்கால் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. தண்ணீரைப் பார்த்ததும் ஆபத்தை அறியாத சிறுவர்கள் தண்ணீரை நோக்கி சென்றனர். தடுப்பாக மரக்கட்டைகள் இருந்த போதும் அதற்குள் புகுந்து அமரன் வாய்க்காலுக்குள் இறங்கினான். 

ஆர்வமிகுதியில் ராஜன் வாய்க்காலுக்குள் இறங்கிய சிறுவனை அதில் வேகமாக சென்று கொண்டிருந்த நீர் அடித்துச் சென்று விட்டது.  இதனைக் கண்ட  உடன் சென்றிருந்த மற்றொரு சிறுவன்  அலறியவாறு ஓடி வந்து ரஞ்சிதாவிடம் தகவலை கூறியிருக்கிறான்.  உடனடியாக அஞ்சலகத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து சிறுவனை  வாய்க்காலுக்குள் இறங்கி தேடி இருக்கின்றனர். ஆனாலும் சிறுவன் கிடைக்கவில்லை.

இது குறித்து சீர்காழி தீயணைப்புத் துறையினர் மற்றும் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தேடியும் சிறுவன் உடல் கிடைக்கவில்லை.

இதனையடுத்து சிறிது நேரத்தில் அனுமந்தபுரம் என்ற இடத்தில் ராஜன் வாய்க்கால் கரையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சிறுவனின் உடல் ஒன்று வாய்க்காலில் மிதந்து வருவதை கண்டனர். அவர்களில் ஒருவர் உடனடியாக வாய்க்காலுக்குள் இறங்கி சிறுவனின் உடலை கரைக்கு தூக்கினார். சிறுவனுக்கு உயிர் இருக்கிறதா என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்ட அவர்கள் சற்றும் தாமதிக்காமல் கொள்ளிடம் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை தூக்கிக்கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்ததை உறுதி செய்தார். இதனையடுத்து கொள்ளிடம் போலீஸார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டரை  வயது சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம்  கொள்ளிடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in