தென்காசி மாவட்டம், பாசவூர்சத்திரம் அருகே வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அஸ்வந்த் என்ற மகன் உண்டு. குழந்தைக்கு ஒன்றரை வயது மட்டுமே ஆகிறது. இவர்களது வீட்டின் முன்பக்கத்தில் குடிநீருக்காக தண்ணீர் தொட்டி வைத்திருந்தனர்.
குழந்தை அஸ்வந்த் வீட்டின் முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லையே என பதறிப்போய் ரமேஷ் தேடியபோதுதான், அஸ்வந்த் தண்ணீர் தொட்டியில் தவறுதலாக விழுந்து பலியாகி இருப்பது தெரியவந்தது. இதைக் கேள்விப்பட்ட பாவூர் சத்திரம் போலீஸார் சிறுவன் அஸ்வந்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தன்ர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தங்கள் வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர்கள் மீது பார்வையை வைத்துக்கொண்டே இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.