இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), சார்பில் மேற்கு வங்கத்தில் உள்ள எல்லைப்புற பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு தேனீக் கூடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தியா, அண்டை நாடான வங்கதேசத்துடன் 4096 கிமீ நீளத்திற்கு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதில் 2,217 கிமீ மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் கால் நடை, தங்கம், வெள்ளி மற்றும் போதை மருந்துகள் கடத்தும் செயல்கள் அதிகமாக நடைபெறுவதாகவும், அதற்காக எல்லையில் போடப்பட்டுள்ள வேலியை கடத்தல்காரர்கள் உடைப்பதும், உடைக்க முயற்சிப்பதுமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதியை காவல் காக்கும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் அத்தகைய நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் விதமாக எல்லை வேலிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் தேனீக் கூடுகள், மரச் சட்டகத்தோடு அமைக்கப்படுகின்றன.
32-வது பிஎஸ்எஃப் படையணி சார்பில் நாடியா மாவட்டத்தின் எல்லைப் புற பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், அந்தப் பகுதி மக்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முயற்சியின் மூலமாக எல்லையைத்தாண்டி கால்நடை மற்றும் மற்ற பொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க முடியும் என எல்லை பாதுகாப்புப் படையினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் மத்திய அரசும் விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ தாவரங்களை தேனீக்கூடுகளைச் சுற்றி அமைக்கும்போது தாவரங்களின் பெருக்கத்திற்கான மகரந்தச் சேர்க்கையாளர்களாகவும் தேனீக்கள் பணியாற்றும் என்பதால் இதன் மூலம் இரட்டிப்பு பயன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.