இன்று தமிழகம் வருகிறது குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் உடல்

இன்று தமிழகம் வருகிறது  குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட  இளைஞர் உடல்

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூர் இளைஞர் முத்துக்குமரனின் உடல் குவைத்தில் இருந்து இன்று தமிழகம் கொண்டு வரப்படுகிறது. 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே   லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் (30) வேலை தேடி தனியார் நிறுவனம் மூலம் இந்த மாதம் 3-ம் தேதி தமிழகத்திலிருந்து புறப்பட்டு குவைத் சென்றார்.

அவரை வேலைக்குத் தேர்வு செய்த ஐதராபாத் நிறுவனம் குவைத்தில் அவருக்கு கிளர்க் வேலை அல்லது வீட்டில் உள்ள சிறு, சிறுப்பணிகளைச் செய்யும் உதவியாளர் பணி வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. அதனையடுத்து, தான் வறுமை சூழ்நிலையில் இருந்தபோதும் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டி இந்த வேலைக்கு சென்றார் முத்துக்குமரன். குவைத் சென்றதும் தனது மனைவி வித்யா மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு வந்து சேர்ந்து விட்ட தகவலை கூறியிருக்கிறார்.

ஆனால் 7- ம் தேதி முதல் அவரது செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டது. இதனால் பதறிப் போன மனைவி வித்யா மற்றும் குடும்பத்தினர் தவிர்த்துப் போயுள்ளனர்.  இந்த நிலையில் திடீரென குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டார் முத்துக்குமரன். 

தனக்குப் பேசிய வேலையைக் கொடுக்காமல், பணக்காரர் ஒருவருக்காக  பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.  தங்கும் இடத்தில் மின் வசதி கூட இல்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.  தனது கணவர் கூறிய செய்தியைக் கேட்டு வித்யாவும், அவரது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். 

இந்த நிலையில் முத்துக்குமரன் குவைத்தில் உள்ள தனது முதலாளியிடம், ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்ய தான் வரவில்லை, அதனால் தனது சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முதலாளி, முத்துக்குமரனை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையும் முத்துக்குமரன் தனது மனைவி  உள்ளிட்டவர்களுக்கு போன் செய்து கூறியிருக்கிறார். 

இதையடுத்து முத்துக்குமரன் நாடு திரும்ப விரும்புவதாக  குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.  இந்த தகவலை அறிந்த அவரது முதலாளி, ஜாக்கூர் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு இருந்த முத்துக்குமரனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்த அவரது மனைவி வித்யா, இதுதொடர்பாக திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் மனு அளித்தார். இதற்கிடையே முத்துக்குமரன் சாவுக்கு நீதிகேட்டு கூத்தாநல்லூரில்  பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர்.

வைகோ, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முத்துக்குமார் உடலை  தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொண்டனர். இதையடுத்து தமிழக அரசு, மத்திய அரசு மூலமாக அதற்கான ஏற்பாடுகளை செய்தது.  அதனையடுத்து முத்துக்குமார் உடல்  குவைத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு இன்று புறப்பட்டுள்ளது. 

இன்று மதியம் 2:30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் முத்துக்குமார் உடல்  கொண்டுவரப்படுகிறது. அங்கிருந்து அவரது  உடலை திருவாரூர் கொண்டுவர அரசு தரப்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in