அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டு இருக்கும்போது மாயமான வாலிபர் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் அம்பை, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்
இந்தநிலையில் நேற்று கோவில்பட்டி பகுதியில் இருந்து ஒரு வேனில் சுமார் 40 பேர் அம்பை அருகேயுள்ள ஆலடியூர் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வந்தனர். இதில் கோவில்பட்டியைச் சேர்ந்த மரக்கடையில் பணிபுரியும் கருப்பசாமி என்பவர் மகன் விக்னேஸ்வரன் (28) என்பவர் ஆலடியூர் ஆற்றுப்பாலம் அருகில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று திடீரென மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்து அம்பை தீயணைப்பு துறையினர் அவரை தீவிரமாக தேடினர்.
இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று காலை மீண்டும் ஆற்று பகுதியில் தீயணைப்புதுறையினர் வாலிபரை தேடினர். இதில் விக்னேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விகேபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.