
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த மங்களூர் கிராமத்தில் உள்ள கிணற்றில் தாய், மகள் மற்றும் பேத்தி ஆகியோர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் (42). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி சுமதி, தனது மகள்களுடன் மலையனூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் சுமதி கடந்த 2016-ம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
இதனால் 4 வருடங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய சிவகுருநாதன் குடும்பத்தை கவனித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் சென்னையில் மருந்துக் கடையில் வேலைபார்க்கச் சென்ற சிவகுருநாதனுக்கு அங்கிருந்த மிஸ்பா சாந்தி(35) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் நெருங்கிப் பழகியதில் ஹெலன் கிரேஸ் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அங்கேயே அவர்களுடன் வசித்து வந்துள்ளார் சிவகுருநாதன்.
பின்னர் சொந்த ஊரில் உள்ள தனது மகள்கள் நிலைகருதி திடீரென தான் மட்டும் சொந்த ஊர் திரும்பிய சிவகுருநாதன் தனது மகள்களுடன் வசித்து வந்துள்ளார். திரும்ப சென்னை செல்லவே இல்லை. அதனால் அதிர்ச்சியடைந்து மிஸ்பாசாந்தி கடந்த நவ.27-ம் தேதியன்று அவரது மகள் ஹெலன்கிரேஸ், மற்றும் மிஸ்பா சாந்தியின் தாய் டெபோரல் கல்யாணி(60) ஆகியோருடன் மலையனூர் வந்தார்.
அங்கு வந்து சிவகுருநாதனை சந்தித்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று காலையில் மூவரும் பெருமாள் கோயில் அருகிலுள்ள வேல்முருகன் என்பவரது கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சிறுபாக்கம் போலீஸார், வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், அவர்களது உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிவகுருநாதனை சந்திக்க வந்த நிலையில் அவர்கள் சந்தேக மரணம் அடைந்தது குறித்து அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகள், பேத்தி என மூன்று பெண்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.