ஊருக்குள் புகுந்தது வெள்ளம்: உயிர் பிழைக்க ஊரை விட்டு வெளியேறும் மக்கள்

மார்பளவு தண்ணீரில் பொதுமக்கள்.
மார்பளவு தண்ணீரில் பொதுமக்கள்.

சீர்காழி பகுதியில் பெய்த அதிக கனமழை விளைவாக உப்பனாற்றின் கரை உடைத்துக் கொண்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் உயிர் பிழைக்க ஊரைக் காலி செய்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

வங்கக் கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த அதி கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணி வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அனைத்து  கிராமங்களும்,  நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 31 சென்டிமீட்டர் மழையும், செம்பனார்கோவில் பகுதியில் 24 சென்டிமீட்டர் மழையும், பொறையாறு பகுதியில் 18 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

சீர்காழி பகுதியில் ஓடும் ஒப்பனாற்றின் கரை உடைத்துக்கொண்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்திஇருப்பதால் சீர்காழி அடுத்துள்ள சூரக்காடு பகுதியில் கிட்டத்தட்ட 300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால்   இரவு முழுவதும் கொட்டும் மழையில் உயிருக்கு பயந்தபடி வீட்டுக்குள் படுக்கவும் முடியாமல் பெரும் அவஸ்தையில் மக்கள் சிரமப்பட்டனர். இன்று காலை விடிந்ததும் இடுப்பளவு தண்ணீரில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். 

மாவட்ட நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நிவாரண முகாம் அமைக்கப் பட்டுள்ளது.  பொதுமக்கள் அரசின்  நிவாரண மையத்தை நோக்கிச் சென்று வருகின்றனர்.  இந்த வெள்ளம் காரணமாக அந்தப் பகுதியில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த அதீத கன மழையால்  சீர்காழி பகுதியில் மட்டும் 35 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதேபோல கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆரப்பள்ளம், புளியந்துரை, ஆச்சாள்புரம், மகேந்திரப்பள்ளி, வெட்டத்தாங்கரை என பெரும்பாலான கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. சம்பா சாகுபடி சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் முற்றிலுமாக மூழ்கி இருப்பதால் அவை இனி காப்பாற்றுவது கடினம் என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in