மின்னல் வேகத்தில் தலையில் தாக்கிய பந்து; சுருண்டு விழுந்த பாகிஸ்தான் வீரர்: வலைபயிற்சியில் விபரீதம்!

மின்னல் வேகத்தில் தலையில் தாக்கிய பந்து; சுருண்டு விழுந்த பாகிஸ்தான் வீரர்: வலைபயிற்சியில் விபரீதம்!

டி20 உலகக் கோப்பைக்காக வலைபயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் தலையின் மீது கிரிக்கெட் பந்து பலமாக தாக்கியது. இதில் சுருண்டு விழுந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்றுடன் முதல் சுற்று நிறைவடைந்தது. முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறி மற்ற 8 அணிகளுடன் இணைந்தன. சூப்பர்12 சுற்றில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

சூப்பர்12 சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. பெர்த்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதனிடையே, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன. இந்த நிலையில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

பாகிஸ்தான் அணி வீரர் ஷான் மசூத் வலைபயிற்சியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது முகமது நவாஸ் வேகமாக அடித்த பந்து பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத் தலை மீது பட்டது. இதில் மைதானத்திலேயே அவர் கீழே சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் ஷான் மசூத் விளையாடுவாரா என்பது சந்தேகமே.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in