
தர்மபுரி அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானைக்குட்டி, ஆஸ்கர் புகழ் தம்பதியான பொம்மன்-பெள்ளி ஆகியோரின் பராமரிப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒரு வாரகால பராமரிப்புக்கு பின்னர் அங்கிருந்து முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு நிலையம் முகாமிற்கு இன்று அதிகாலை வந்தடைந்தது.
தர்மபுரி மாரண்டஹள்ளி அருகே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் 2 குட்டிகளை வனத்தில் யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் பணிக்காக மாரண்டஹள்ளி பகுதியில் முகாமிட்டிருந்த ஆஸ்கர் புகழ் யானைப்பாகன் பொம்மன் இந்த ஒரு வயதுடைய ஆண் யானை குட்டியுடன் முதுமலை வந்தார்.
முதுமலை முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த யானைக்குட்டி இனி ஆஸ்கர் புகழ் பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோரின் பராமரிப்பில் முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் வளர உள்ளது. யானைக்குட்டி தற்போது நல்ல உடல் நிலையில் உள்ளதாகவும், தற்போது மேற்பராமரிப்புக்காக தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.