33 கோடி மதிப்பிலான சிலையை மாறுவேடத்தில் சென்று மீட்ட போலீஸார்

33 கோடி மதிப்பிலான சிலையை மாறுவேடத்தில் சென்று மீட்ட போலீஸார்

கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 33 கோடி ரூபாய் மதிப்பிலான பெருமாள் உலோகச் சிலையை திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

புராதனமான கோயில்களில்  இருந்து சிலைகள் கடத்தப்பட்டு வெளி மாநாடுகளுக்கு ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மாநிலம் முழுவதும் தங்களுடைய சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி திருச்சி சிலை கடத்தல் பிரிவு போலீஸார் தங்களுக்குக் கிடைக்கும் ரகசிய தகவல்களை அடிப்படையாக வைத்து, கண்காணித்து  தொடர்ந்து கடத்தல் சிலைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.  

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு  விற்பனைக்காக கோவை  கொண்டுவரப்பட்ட நடராஜர் உலோகச் சிலையை கைப்பற்றிய திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  போலீஸார் நேற்று கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட வெங்கடாஜலபதி சிலையை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்  வசித்து வரும் ஆர்.எஸ்.பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்  அதனடிப்படையில் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ்,  பாண்டியராஜன்,  சிறப்பு உதவி ஆய்வாளர் நாகேந்திரன்,  மற்றும் காவலர்கள்  ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கோபிசெட்டிபாளையம் சென்று பழனிசாமி வசிக்கும் பகுதியில் கண்காணித்தனர்.

அவரிடம் சிலை இருப்பது உறுதி செய்யப்பட்டதும், அதனை வாங்குபவர்கள் போல  மாறுவேடத்தில் சென்று பழனிச்சாமியிடம் சிலையை விலை பேசினர்.  பழனிச்சாமி  33 கோடி ரூபாய் விலை சொன்ன  நிலையில் மாறுவேடத்தில் சென்ற போலீஸார்  15 கோடி ரூபாய்க்கு விலையை இறுதி செய்துள்ளனர்.

அதன்படி நேற்று  மாலை  அளவில் சிலையை வாங்குவதற்காக மாறுவேடத்தில் சென்ற தனிப்படையினரிடம்  பழனிச்சாமி மறைத்து வைத்திருந்த 22. 800 கிலோ எடையுள்ள, 58செமீ உயரமும், 31செமீ அகலமும் உள்ள சிலையை எடுத்து காண்பித்துள்ளார். உடனடியாக அதனை  பறிமுதல் செய்த அதிகாரிகள் அது எந்த கோயிலில் இருந்தது  அல்லது யாருக்குச்  சொந்தமானது என்பது குறித்து  விசாரித்து வருகின்றனர்.  

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன்,  "கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோயிலில் இருந்து அந்த கோயிலைச்  சேர்ந்த அர்ச்சகர் மூலம் இந்த சிலையை விற்பனை செய்வதற்கு முயன்றுள்ளனர்.  அதன் அடிப்படையில் முதற்கட்டமாக இந்த சிலையின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்து,  அந்த கோயிலுக்குச் சொந்தமானதுதானா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் பின் பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பாலமுருகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in