ஊரை பாதுகாக்க உரிமையோடு தீர்மானம் நிறைவேற்றுங்கள்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு

பழுப்பு நிலக்கரி
பழுப்பு நிலக்கரி ஊரை பாதுகாக்க உரிமையோடு தீர்மானம் நிறைவேற்றுங்கள்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு

நாளை நடைபெற உள்ள குடியரசு தின  சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நம் ஊரை பாதுகாத்துக்கொள்ள தேவையான தீர்மானங்களை  நிறைவேற்றிக் கொள்ளுங்கள்  என்று மீத்தேன்  திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு  கேட்டுக் கொண்டுள்ளது. 

இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நம் ஊரை பாதுகாத்துக் கொள்ள எத்தனைத் தீர்மானங்கள் தேவையோ அத்தனையையும் எவ்வித தயக்கமும் இன்றி கிராமசபையில் நிறைவேற்றுங்கள். கடலூர் மாவட்டத்து மக்கள் அந்த மாவட்டத்தில் உள்ள  காட்டுமன்னார்கோயில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட அத்தனை கிராமங்களிலும் கட்டாயமாக  சில தீர்மானங்களை இயற்ற வேண்டியது மிக மிக அவசியம்.    

நம் ஊர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று தமிழ்நாடு அரசால் சட்டபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மண்டலத்தில் அமைந்திருக்கும் பகுதி. இப்பகுதியில் வேளாண்மைக்குப் புறம்பான எந்த நடவடிக்கையும் கூடாது என்பதே சட்டம். நம் பகுதியில் வேளாண்மையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி பழுப்பு நிலக்கரி எடுக்கும் நாசகார திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கம் இந்திய அரசின் சில நிறுவனங்களுக்கு உள்ளது.

பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான திட்டத்தின் தொடக்கமாக, நம் பகுதிகளில் மினரல்ஸ் எக்ஸ்புளோரேஷன் கன்சல்டன்சி லிமிடெட் (MECL) என்ற நிறுவனம் ஆய்வுப் பணிகளை முன்னெடுப்பதை கிராமசபை வன்மையாகக் கண்டிக்கிறது.  இது சட்ட மீறல் என்பதால் இந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கிராமசபை வலியுறுத்துகிறது. 

எங்களுடைய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எந்த இடத்திலும், தனியாருக்கு சொந்தமான, அரசுக்கு சொந்தமான, அறநிலையங்களுக்குச் சொந்தமான, பொதுநிலப் புறம்போக்குப் பகுதியிலும், அது விளைநிலமானாலும், விளையா நிலமாக இருந்தாலும், எந்த இடத்திலும் பழுப்பு நிலக்கரி லிக்னைட் எடுப்பிற்கான ஆய்வோ, எண்ணெய் எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கான ஆய்வோ நடத்தக்கூடாது.

எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்லுவதற்கான குழாய்கள் அமைப்பது தொடர்பாகவும் அல்லது வேறு எந்த பெருந்திட்டம் தொடர்பாகவும் செயல்படவும், எவ்வித ஆய்வு நடத்துவதற்கும், அனுமதி இல்லை என்று தீர்மானிக்கப்படுகிறது. அப்படி நடத்துவது நம் ஊரின் ஒட்டுமொத்த பொதுநலனுக்கும் புறம்பான செயலாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்படுகிறது என்ற தீர்மானங்களை நிறைவேற்றுங்கள்.       

கடலூர் மாவட்டத்தின் பிறபகுதிகள் 2020 -ம் ஆண்டு இயற்றப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில்  விடுபட்டுள்ளன. அவற்றையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் சேர்ப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே அந்தப் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு  தங்கள் பகுதியைப் பாதுகாக்கப் வேண்டிய கடமை இருக்கிறது.  "வேளாண் மண்டலப்  பகுதியைச் சேர்ந்த " என்ற சொற்கோவையைச் சேர்த்துக் கொண்டோ, சேர்க்காமலோ, இதே தீர்மானத்தை அவர்களும்  நிறைவேற்ற வேண்டும்.

சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி தவிர  நாச்சியார்குடி,  பாகூர், பாபநாசம், மன்னார்குடி, பாளையங்கோட்டை, ஜெயங்கொண்டம்,  கும்பகோணம் ஆகிய பகுதி கிராமங்களிலும் இந்த  தீர்மானத்தை அவசியம் நிறைவேற்ற வேண்டுகிறோம்.

இது கட்டாயம் தேவை! நீங்கள் விவசாயியாக இல்லாவிட்டாலும் இந்த மண்ணை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. நம்முடைய வாழ்விடத்தையும், வளங்களையும், வாழ்வாதாரங்களையும்  காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அலட்சியம் காட்டினால் நம் வாழ்நிலப் பரப்பு முழுவதையும் கரிக்காடாக மாற்றி விடுவார்கள். சந்ததிகள் வேற்றிடம் தேடி அகதிகளைப் போல அலைய நேரும். தவறாமல் தீர்மானத்தை  இயற்ற வேண்டுகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in