தகவல் சொன்ன உளவாளி; காரில் கடத்தி வரப்பட்ட நடராஜர் சிலை பறிமுதல்: ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்

பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை
பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை

சிலை கடத்தல்காரர்களால் காரில் கொண்டுவரப்பட்ட திருவாட்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலையை  கண்டறிந்து பறிமுதல் செய்துள்ள  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், கடத்தல்காரர்களையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சில கும்பல்கள் பழமையான கோயில்களில் இருந்து சாமி சிலைகளை திருடி வெளிநாட்டுக்கு கடத்தி விற்பதாக கிடைத்த தகவலை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு  கடத்தப்படும் சிலைகளை மீட்டு வருகின்றனர்.  கடத்தல்காரர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். 

அந்த வகையில் கோயம்புத்தூரில் ஒரு கும்பல் இவ்வாறு சிலைகளை கடத்தி விற்பனை செய்து வருவது போலீஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் பிரேமா சாந்தகுமாரி தலைமையிலான குழுவினர் கோவை  சென்று ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.  அவர்களின் விசாரணையில் ஒரு கும்பல் நடராஜர் உலோக சிலையை வைத்திருப்பது தெரியவந்தது. சிலை  வாங்குபவர்கள்  போல நடித்து அவர்களை தொடர்பு கொண்டு சிலையை எடுத்து வரச் செய்தனர். 

கோவையில் இருந்து பல்லடம் செல்லும்  சாலையில் இருகூர் பிரிவு  அருகே நேற்று அவர்களை வரச் செய்த போலீஸார், கடத்தக்காரர்கள் வந்த காரை வழிமறித்து  சோதனை செய்தபோது அதில் ஒரு சாக்கில்  சுற்றி வைக்கப்பட்டிருந்த  மூன்று அடி  உயரமுள்ள  திருவாட்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலை இருப்பது தெரியவந்தது. அதற்கு அவர்கள் தகுந்த விளக்கம் கூற முடியாததையடுத்து நடராஜர் சிலையை பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்,  அதனை எடுத்து வந்த மேட்டூரை சேர்ந்த தங்கமணி மகன் ஜெயந்த் ( 22) என்பவரையும், கேரள மாநிலம் பாலக்காட்டைச்  சேர்ந்த ஹரிதாசன் நம்பூதிரி மகன் சிவபிரசாத் நம்பூதிரி (53) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. உளவாளி மூலம் தகவல் தெரிந்துகொண்டு,  சிலை வாங்குபவர்கள் போல நடித்து சிலை கடத்தல்காரர்களை கைது செய்த போலீஸாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in