நெல் கொள்முதல் செய்ய 25 ஆயிரம் லஞ்சம்: இரண்டு பேர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்!

நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்

சிதம்பரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில்  விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற இரண்டு பேரை லஞ்ச ஒழிப்புத்துறையினர்  கையும் களவுமாக பிடித்தனர்.

சிதம்பரம் அருகே பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி முகுந்தன் என்பவர் அறுவடை செய்த 450 நெல் மூட்டைகளை சி.சாத்தமங்கலம் பகுதியில் இயங்கி வரும் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு இன்று  காலை எடுத்து வந்தார். அப்போது  அந்த நெல்  மூட்டைகளை கொள்முதல் செய்ய அங்கு பணியில் இருந்த கொள்முதல் நிலைய  பட்டியல் எழுத்தர் ரகுமான், மேஸ்திரி தியாகராஜன், மேஸ்திரியின்  உதவியாளர் சிவனேசன் ஆகியோர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.  

அதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி முகுந்தன்  லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். 

அதனையடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் கொள்முதல் நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது முகுந்தன் லஞ்சம் கொடுக்கும் போது பட்டியல் எழுத்தர்  ரகுமான்  மற்றும் மேஸ்திரி தியாகராஜன் உள்ளிட்டவர்களை  கையும் களவுமாக பிடித்தனர். மேஸ்திரியின் உதவியாளர் சிவநேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in