லஞ்சம் வாங்கும்போது வசமாக சிக்கிய மோட்டார் வாகன ஆய்வாளர்: போலீஸார் அதிரடி!

லஞ்சம் வாங்கும்போது வசமாக சிக்கிய மோட்டார் வாகன ஆய்வாளர்: போலீஸார் அதிரடி!

ஓட்டுனர் உரிமம் தர லஞ்சம் பெற்ற துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கினார்.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த சண்முகம் என்பவர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவரது பள்ளியில் புதிதாக இலகுரக வாகனம், கனரக வாகனம் ஓட்ட கற்றுத் தரப்படுகிறது. கற்றுக் கொண்டவர்களுக்கு துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் உரிமமும் பயிற்சி பள்ளி மூலமாகவே பெற்று தந்து வருகிறார்.

அப்படி கடந்த வாரத்தில் இலகு ரக வாகனங்களுக்கான உரிமம் பெறுவதற்காக நான்கு விண்ணப்பங்களை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அவற்றிற்கு அங்கு பணிபுரியும் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி உரிமம் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். புதிய ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்குவதற்காக இலகுரக வாகனங்களுக்கு 1500 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 3000 ரூபாயும் அவர் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

சண்முகத்திடமும் அவர் அளித்த விண்ணப்பங்களுக்கான உரிமம் வழங்க 6000 ரூபாய் லஞ்சமாக கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகம் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி மணிகண்டனிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியிடம் சண்முகம் இன்று நேரில் சென்று கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் பெற்று பிடிபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in