`கட்டிவைத்து இரும்பு ராடால் தாக்கினர்; 18 மணி நேரம் உணவு தரவில்லை'- இந்திய கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு கொடுமை

பாதிக்கப்பட்ட மீனவர்கள்
பாதிக்கப்பட்ட மீனவர்கள்

இந்திய கடற்படையினர் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு மட்டுமல்லாமல்,  தங்களை படகில் கட்டி வைத்து இரும்புராடால் மிகக் கடுமையாக தாக்கினார்கள்  என்று கண்ணீர் மல்க கூறுகின்றனர் பாதிக்கப்பட்டுள்ள  தமிழக மீனவர்கள்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த வீரவேல், செல்வகுமார், செல்லத்துரை உள்ளிட்ட பத்து மீனவர்கள்  கடந்த 15-ம் தேதியன்று காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு அருகே சர்வதேச கடற் பகுதியில்  மீன் பிடித்து கொண்டிருந்தனர். 

அப்போது அந்த பகுதியில் இந்திய  கடற்படை கப்பலான ஐஎன்எஸ் பங்காரம்  ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன.  மீனவர்களின் விசைப்படகை கண்ட கடற்படையினர், அதனை நிறுத்துமாறு விளக்குகள் மூலம் சிக்னல் செய்தனர். ஆனால்  இந்திய கடற்படை கப்பலை கண்ட மீனவர்கள் அது  இலங்கை கடற்படை கப்பல் என தவறுதலாக  நினைத்து அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்தப் பகுதியில் இருந்து விசைப்படகை வேகமாக செலுத்தினர். 

இதனைக்கண்ட இந்திய கடற்படையினர் மீனவர்களை எச்சரித்தும் படகை  நிறுத்தாமல் சென்று கொண்டிருந்ததால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் வீரவேல் என்பவருக்கு தொடை மற்றும் வயிறு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில்  படுகாயம் அடைந்து அவர் தற்போது  மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மீனவர்களின்  விசைப்படகை மண்டபம் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்ற கடற்படை அதிகாரிகள் அங்குவைத்து நேற்று முழுவதும்  விசாரணை நடத்தினர்.  அதனைத் தொடர்ந்து அவர்களைக்  நாகப்பட்டினம் துறைமுகத்தில்  கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் மீனவர்களையும்,  படகுகளையும் கடற்படையினர் நள்ளிரவு ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 9 பேரும் நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது தமிழக காவல்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசிய மீனவர்கள் இந்திய கடற்படையினர்  தங்களை மிகக்கடுமையாக தாக்கியதாக குற்றம் சுமத்தியுள்ளனர். இந்திய கடற்படை அதிகாரிகள் மீனவர்களின்  கைகளை கட்டி இரும்பு ராடால் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கப்பலில் வைத்து தாக்கியதாகவும், சுமார் 18 மணி நேரத்திற்கு மேலாக உணவு குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அத்துமீறலில் ஈடுபட்ட கடற்படை அதிகாரங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in