ஒரு கோடி கடனுக்கு 1.25 லட்சம் கொடுத்தார்: பிரபல எம்பி பழக்கம் இருப்பதாக நடிகையை மிரட்டும் பைனான்சியர்

ஒரு கோடி கடனுக்கு 1.25 லட்சம் கொடுத்தார்: பிரபல எம்பி பழக்கம் இருப்பதாக நடிகையை மிரட்டும் பைனான்சியர்

நடிகர் ரஜினி, கமல் முதலானோருடன் நடித்த நடிகை ஜெயதேவி, தான் இயக்கி வரும் திரைப்படத்துக்கு ஒரு கோடி ரூபாய் கடன் வழங்குவதாகக் கூறி, 1.25 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக பைனான்சியர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூர் சமயபுரம் நகரை சேர்ந்தவர் நடிகை ஜெயதேவி(62). இவர் 1980களில் வெளியான 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ’பாவத்தின் சம்பளம்’ என்ற திரைப்படத்திலும், கமல் நடிப்பில் வெளியான ’இதயமலர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார்.

இந்நிலையில் ஜெயதேவி கடந்த 2005-ம் ஆண்டு சுமார் 6 கோடி ரூபாய் செலவில் பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரனை கதாநாயகனாகவும், குஷ்புவை கதாநாயகியாகவும் வைத்து ’பவர் ஆஃப் உமன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தார்.

இந்தத் திரைப்படத்தின் பணிகள் முடிவடையாததால் தற்போது வரை அப்படம் வெளியாகாத நிலை ஏற்பட்டது. படத்தை முடிக்க ஒரு கோடி ரூபாய் கடன் தேவைப்பட்டுள்ளது. அப்போது ஜெயதேவி தனக்குத் தெரிந்த சரவணன் மற்றும் சுந்தர் மூலம் ஊட்டியைச் சேர்ந்த திரைப்பட பைனான்சியர் ரகு என்பவரது அறிமுகம் கிடைத்தது.

மேலும் ரகு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து 100 கோடி ரூபாய் செலவில் ’லாட்டரிச் சீட்டு எனும் நான்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதாக கூறியுள்ளார். ஒரு கோடி ரூபாய் தயாராக இருப்பதாகவும், அதற்கு முன்பணமாக 1.22 லட்சம் பணம் கட்ட வேண்டும் என ஜெயதேவிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஜெயதேவி பணத்தை தயார் செய்து ’கூகுள் பே’ மூலமாக பைனான்சியர் ரகுவிற்கு பணத்தை செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ரகு, 1 கோடி ரூபாய் கடன் தராமல் பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த ஜெயதேவி இறுதியில் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதற்கு, திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுடன் எடுத்த புகைப்படத்தை அனுப்பி, இவர்கள் தனது நண்பர்கள் என்றும் முடிந்தால் என் மீது காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள், தனக்கு மிகப்பெரிய பின்புலம் இருக்கிறது என்றும் கூறியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட ஜெயதேவி, தான் மிகுந்த பண நெருக்கடியில் இருப்பதாகவும், எனவே தன்னிடம் மோசடியில் ஈடுபட்ட பைனான்சியர் ரகு மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயதேவி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in